நூருல் ஹுதா உமர்
சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நிவாரண, மனிதநேய உதவிகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் கடந்த சில நாட்களாக ஹம்பாந்தோட்டை மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் இடம்பெற்று வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக கடந்த (13) புதன்கிழமை முதல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இந்த சிகிச்சை முகாம் இடம்பெற்று வருகின்றது. சவூதி தமாம் சர்வதேச கண் பார்வை அமைப்பின் உதவியுடன் இலங்கையில் கண் பார்வைக் குறைபாட்டு நோயினைக் குறைப்பதற்கான சவூதியின் 'அந்நூர்' இலவச திட்டத்தின் கீழ் இந்த முகாம் இடம்பெற்று வருகின்றது.
அதி நவீன கருவிகளைக் கொண்டு மிகவும் பயிற்றப்பட்ட வைத்தியர்கள் மூலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இச்சேவை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று வரை 4,500 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 1,000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளும், 420 பேருக்கு சத்திரசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சவூதி தூதுவராலயம் தெரிவித்தது.