இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை
என்று சொல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு தோண்டப்படும் புதைகுழிகள் பற்றி தெரியாதா? என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர்பிரபாகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவிற்கும் கனடாவுக்கும் உள்ள பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர் பிரச்சினையை திசை திருப்ப முயல்கின்றார். இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறிய கனடா பிரதமரின் கூற்று நியாயமானது என்று உலகமே அறியும். இந்நிலையில் இந்தியா கனடா பிரச்சனையை கையில் எடுத்து இலங்கை இனப்பிரச்சனையை மறைக்க முயல்கின்றார்.
கொக்கு தொடுவாய் முதல் பல மனித புதைக்குழிகள் இலங்கையில் இன படுகொலைகள் இடம்பெற்றதை உறுதி செய்கிறது.
யுத்தம் முடிந்த பின்னர் இடம்பெற்ற மனித படுகொலைகள் உலகம் அறிந்த ஒன்றாகும். இதனை இந்த புதிய அரசியல்வாதி அறிந்திருக்க மாட்டார். இந்தியா கனடா விடயத்தில் மூக்கை நுழைத்து எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைக்க முயல்வது எமது மக்களுக்கு செய்யும் ஒரு பாரிய துரோகமாகும். சிங்கள அரசாங்கத்துக்கு அமைய இவர் பேசுவதை முஸ்லிம் சமூகம் மன்னிக்காது.
இன்று கனடாவில் இலங்கை சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் பாரிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சற்றும் சிந்திக்காமல் கனடா பிரதமரின் இலங்கை சம்பந்தமான கருத்துக்கு பதில் கொடுப்பதற்காக தவறுதலாக செயல்படும் வெளிவகார அமைச்சர் சிந்தித்து செயல்படாவிட்டால் இவரை தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் மன்னிக்காது எனத் தெரிவித்துள்ளார்.