கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்கள் 2027 மார்ச் மாதத்திற்குள் அகற்றப்படும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசாங்கத்தின் நிதிக்குழு முன்னிலையில் அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதாரத்துடன் இணைந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் கீழ் இயங்குவதாகவும் அவ்வாறே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் முக்கியமாக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான உணவகங்களை அமைப்பதற்கான சட்டபூர்வமான தன்மை குறித்து அரசாங்கத்தின் நிதிக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
துறைமுக நகர அபிவிருத்தியில் நாட்டின் ஏனைய பகுதிகளில் முறைசாரா சாக்கடை மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை களைய வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 12ஆம் திகதி அரசாங்க நிதி தொடர்பான குழு கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வரும் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒழுங்குமுறைகளை பரிசீலிப்பதற்காக பாராளுமன்றத்தில் குழு கூடியது.
இங்கு, துறைமுக நகரத்தில் அத்தகைய உணவகங்களை நிறுவுவதற்கு உரிய அதிகாரிகள் எந்த சட்ட அடிப்படையில் அனுமதியளித்துள்ளனர் என்றும் 2027 ஆம் ஆண்டிற்குள் அவற்றை அகற்றுவதற்கான சட்டபூர்வமான தன்மை என்ன என்றும் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் குழு மேலும் கேட்டுள்ளது. அத்துடன், இந்த அனுமதிகளை வழங்குவது மற்றும் நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொண்டீர்களா என ஆணைக்குழு உறுப்பினர்களிடம் குழு கேட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான தகவல்களை விரைவில் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.