பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அபிவிருத்தியடையாத பிரதேசமாக இருந்த பியகம பிரதேசத்தில் வர்த்தக வலயம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை அடைந்துள்ளதாகவும் முழு இலங்கையையும் முதலீட்டு வலயமாக மாற்றி பல புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகிற்கு திறந்துவிடப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) நூற்றாண்டு விழா நிகழ்வில் புதன்கிழமை (06) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பிங்கிரிய, இரணவில, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கான இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக நிர்மாணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமது மாவட்டங்களின் அபிவிருத்திக்காக முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கைத்தொழில் மயமாக்கல் எமது நாட்டுக்கு உகந்ததல்ல என சிலர் கூறினாலும் இன்று பியகம முதலீட்டு வலயம் தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளதாகவும் பியகம, கட்டுநாயக்க போன்ற கைத்தொழில் மயமாக்கல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டால், இன்று நாடு பொருளாதார அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருந்திருக்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உழைக்கும் அதேவேளை, எதிர்கால இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு புதன்கிழமை (06) பிற்பகல் வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாணவர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
நூற்றாண்டு நினைவு முத்திரையை வெளியிட்டு வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் இணைந்து கொண்டார்.
மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதியொருவரின் முதல் வருகையைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி விசேட விருந்தினர் புத்தகத்தில் நினைவுப் பதிவொன்றை இட்டதோடு கல்லூரியின் நூற்றாண்டு நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்தார்.
கல்லூரியில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
இங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மல்வானை அல் முபாரக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரதேசம் முன்னர் வல்கம என்று அழைக்கப்பட்டது. வல்கம வித்தியாலயமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் மல்வானை வித்தியாலயமாக மாறியது. மல்வானை வித்தியாலயத்தை இந்த மட்டத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கு என்னாலும் பங்களிப்புச் செய்ய முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
1977 ஆம் ஆண்டு நான் மல்வான பிரதேசத்திற்கு வந்த போது அல் முபாரக் கல்லூரியை அபிவிருத்தி செய்யுமாறு பலர் என்னிடம் கோரினார்கள். அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. அல் முபாரக் கல்லூரியை அபிவிருத்தி செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் என்னிடம் கேட்டுக்கொண்டார். அருகில் உள்ள வீட்டில் இருந்துதான் அல் முபாரக் கல்லூரியுடன் தொடர்புகளை வைத்திருந்தோம்.
நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலும் அதன் பின்னரும் அல் முபாரக் கல்லூரியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே இன்று அல் முபாரக் கல்லூரி மாணவர்கள், சிறந்த கல்வியைப் பெற்று எதிர்காலத்தில் வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மல்வானை மக்களின் முதல் நோக்கமே தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதாகும். இன்று மல்வானைவித்தியாலயம் அந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
நான் 1977 இல் மல்வானைக்கு வந்த போது இது மிகவும் முன்னேற்றமடையாத பிரதேசமாக இருந்தது. இப்பகுதியில் ஏழை மக்களே வசித்து வந்தனர். மின்சாரம் இருக்கவில்லை. சிலர் வாழ்வதற்காக சாக்கு மூட்டைகளைக் கழுவினார்கள். இன்னும் சிலர் பீடி சுற்றினார்கள். நாங்கள் இந்தப் பகுதிக்கு வந்து பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் போது இப்பகுதிக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுப்பதாக ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தேன்.
மேலும், இப்பிரதேசத்தை முன்னேற்ற கைத்தொழில்கள் தேவை என்று முடிவு செய்தேன்.கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை ஜே.ஆர் ஜயவர்தன நிறுவி இரண்டாவது சுதந்திர வலயத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார். அன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பியகம தொகுதியை என்னிடம் ஒப்படைத்ததன் பின்னர் நான் எனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்த போது இந்தப் பிரதேச மக்கள் எனக்கு பெரிதும் உதவினர்.
இந்த சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதற்கு அவசியமான நிலம் இந்தப் பகுதியில் மாத்திரமே இருந்தது. பியகம சுதந்திர வர்த்தக வலயம் ஆரம்பிக்கப்பட்ட தென்னந்தோப்புகள் மல்வானை முஸ்லிம்களுடையவை. எப்படியோ அந்த மக்கள் இந்தக் காணிகளை எமக்கு வழங்கினர். அதற்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்தோம். அத்துடன் இந்த மல்வானைப் பிரதேசமும் இன்று பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இலங்கை கைத்தொழில்துறைக்கு ஏற்றதல்ல என்று பலர் கூறினர். ஆனால் நாம் இங்கிருந்து ஆரம்பித்தோம். அதே நேரத்தில், இந்த மாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடுவெல - பியகம பாலம் நிர்மாணிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. 05 வருடங்கள் செல்ல முன்னர் இங்கு ஒரு பாரிய முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
இன்று பியகம வர்த்தக வலயம், தெற்காசியாவில் உள்ள சிறந்த வர்த்தக வலயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க மற்றும் பியகம வர்த்தக வலயங்களை இணைத்தால் அதற்குப் போட்டியாக வேறு எதுவும் இருக்க முடியாது. கட்டுநாயக்க வர்த்தக வலயம் இருந்ததால் கைத்தொழில் மயமாக்கலை முன்னெடுப்பதற்காக சீதாவக்க வர்த்தக வலயத்தையும் நான் ஆரம்பித்தேன். நாம் கடுவெல தொழிற்சாலைகளை ஆரம்பித்தோம்.அதன் மையமாக இருந்தது பியகம. இந்தத் கைத்தொழில்கள் அனைத்தையும் வெளிநாட்டு முதலீடுகளாகத்தான் பெற்றோம்.
நான் இன்று இங்கு வரும் போது பெல்ல கபாபு சந்தியில் இரண்டு கடைகள் மாத்திரமே இருந்தது நினைவுக்கு வந்தது. இன்று அங்கு பல கடைத் தொகுதிகள் உள்ளன. பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன.
மேலும், இன்று பால்மா தொழிற்சாலை, கொகா கோலா தொழிற்சாலை, பியர் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், பல வருமான வழிகள் ஏற்பட்டுள்ளன. இன்று இந்தப் பகுதியில் தொழில் இல்லாப் பிரச்சினை இல்லை.
இந்த அபிவிருத்தியை இன்று கடவத்தை பிரதேசத்தில் காணலாம். கிரிபத்கொட முதல் தலுகம, சபுகஸ்கந்த என்பன பாரிய அபிவிருத்திப் பிரதேசங்களாக மாறியுள்ளன. மாகொல மக்கள் இன்று பெருமையுடன் வாழ்கின்றனர். அன்று இவ்வாறானதொரு நிலை இருக்கவில்லை.
அன்று, டயர் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதால் அதனை மூடிவிடும்படி கூறினார்கள். ஆனால் நாம், அது தனியார்மயப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினோம். பெரும் மோதல் ஏற்பட்டது. எல்லா இடங்களிலும் எனக்கு எதிராக சுவரொட்டிக்கள் ஒட்டப்பட்டன. இன்று, இந்தத் தொழிற்சாலையில் இருந்து டயர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்னும் பல தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. இன்று பியகமவும் களனியும் பாரிய வர்த்தக கைத்தொழில் வலயங்களாக உள்ளன.
பியகம போன்ற கைத்தொழில் வலயம் ஒன்று இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் நிர்மாணிக்கப்படவில்லை. இதை மேலும் விரிவுபடுத்தி இந்தப் பகுதியில் புதிய அபிவிருத்தியை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். அத்துடன், புதிய வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்காக பெல்ல கபாபு சந்தியில் காணியொன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்பதற்காக வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் பெற்று வருகின்றோம். பியகம போன்ற வர்த்தக வலயங்களை பல இடங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, முதலீட்டாளர்களை கண்டுபிடித்து அந்தந்த பகுதிகளை முன்னேற்றுமாறு கூறுகின்றேன். இந்த நடவடிக்கைகளை நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை முழுவதும் பியகம, கட்டுநாயக்க போன்ற வர்த்தக வலயங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தால் இன்று இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டிருக்க மாட்டோம். நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக பியகமவை உதாரணமாக எடுத்துக்கொண்டு பாரிய தொழில்மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு பியகம, களனி, கடவத்தை போன்ற பிரதேசங்களை பாரிய நவீன வர்த்தகப் பொருளாதாரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பிங்கிரிய, இரணவில, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில், இதற்குப் பொருத்தமான காணிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதே வசதிகளை ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கி, அடுத்த 15-20 வருடங்களில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான விரைவான அபிவிருத்தியை உருவாக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு நாம் இந்த திட்டங்களுக்குச் செல்ல வேண்டும். நாம் கடனை திருப்பிச் செலுத்த பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த வேலைத்திட்டங்களின் மூலம், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை அடைவதற்கு செயல்படுவோம்.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமாரும் உரையாற்றினார்.
இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான், மல்வானை, அல் முபாரக் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) அதிபர் எஸ்.எச்.எம். நஈம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,பழைய மாணவர்கள்,பொற்றோர்கள்,பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊர்மக்கள் உட்பட பெருந்திரளானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.