இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுதுமலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், இந்த கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.
இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல். நாட்டில் உள்ள சுதாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.
நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக் கொள்ள வேண்டும்.
நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களிலே ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்.
இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் ராஜினாமா செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.
மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.
நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.