ஆர்.ராம்
நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய ஒன்றிணைவு தொடர்பில் எதிர்வரும் ஜனவரியில் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளதோடு, அதற்கான பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான ஆளும், எதிர்த் தரப்பினை உள்ளடக்கிய அணியொன்று உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் குறித்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் எதிர்காலத் தொடர்பில் கருத்திற்கொண்டுள்ள நான் வரலாற்றில் முக்கியமான செயற்பாடொன்றை முன்னெடுத்து வருகின்றேன்.
அந்த வகையில் பாராளுமன்றத்தில் உள்ள ஆளும், எதிர்த் தரப்பினருடன் கலந்துரையடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், பாராளுமன்றத்திற்கு வெளியில் தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அப்பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றரமாகவே உள்ளன.
அந்த வகையில், எமது புதிய ஒன்றிணைவு தொடர்பில் எதிர்வரும் ஜனவரியில் உரிய அறிவிப்பைச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இந்த புதிய ஒன்றிணைவின் மூலமாக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து பணியாற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.