சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தாதியர்களின் யாப்பில் இரகசியமாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த போராட்டத்தை தாதியர் சங்கத்தினர் மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மெடிவத்த கருத்து தெரிவிக்கையில்,
தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், அதிகாரிகள் தாதியர் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வரைவை இரகசியமாக தயாரித்துள்ளனர். அந்த நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டின் சுகாதார அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.