கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
'வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடினோம். அதன்படி உற்பத்தி செலவை கணக்கிட்டு கொடுத்துள்ளோம். கலந்துரையாடலுக்கு பின் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது.
டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும். எங்களுக்கு உற்பத்தியை தொடர அரசு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது.
விலை 1,100 ரூபாவை எட்டும் என நம்புகிறோம். சோளம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. இலங்கைக்கு கொண்டுவந்தால் சோளத்தை முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம். அப்போது உற்பத்தி செலவை குறைக்கலாம். பண்டிகை காலத்தில் இந்த விலையை விட குறைவாக எங்களுக்கு கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.