2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்று வரும் போட்டியில், இந்திய அணியின் துடுப்பாட்டத்தை சீர்குலைத்தவர் இலங்கை இளம் சுழற்பந்து வீச்சாளரான, துனித் வெல்லாலகே இவருடைய சாதுர்யமான பந்துவீச்சில், இந்திய அணியின் முன்னணி வீரர்களே நிலைகுலைந்தனர். இதனால் இந்திய அணி 200 ஓட்டங்களை கூட கடக்க முடியாமல் தடுமாறியது.
துனித் வெல்லாலகே, 5 விக்கெட்கள் மூலம் இணையதளங்களிலும் வைரலானார். இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற U19 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியை தலைமையேற்று நடத்தியிருந்தார்.
இலங்கை அணியின் தலைவராக இருந்தபோது வெல்லாலாகே, உலகளவில் கவனம் ஈர்த்தார்.
தவிர, அந்தத் தொடரில் சகல துறை வீரராகவும் ஜொலித்தார். அவர், அந்தத் தொடரில் ஆறு போட்டிகளில் 13.58 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், 6 போட்டிகளில் 44 சராசரியுடன் 264 ஓட்டங்கள் எடுத்து, இலங்கையின் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான துனித் வெல்லாலகே, அதே போட்டியில் 2 விக்கெட்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.