சுகாதார அமைச்சரை மாற்றுமாறு கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்துப் போராட்டமானது, ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் இன்று(03) முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடியாக தீர்வு வேண்டும் எனக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் முகமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தற்போதைய சுகாதார அமைச்சரை மாற்றி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்' என குறித்த போராட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.