Our Feeds


Monday, September 4, 2023

ShortNews Admin

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் - சஜித் பிரேமதாச பதிலடி.



பொதுவாக வரட்சியான காலநிலையின் போது அணைகள் மற்றும் கால்வாய்கள் பொதுவாக புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


என்றாலும், அண்மைய நாட்களில் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நாட்டில் காணப்படவில்லை என்பதனால் நடைமுறை முற்போக்கு எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இன்றி இருந்தாலும் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்களை மேற்கொண்டு இந்நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்த பங்களிப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், கிரந்திஓயா திட்டம் மாத்திரமல்லாது நாட்டின் விவசாயமும் நவீனமயப்படுத்தப்பட்டு, நவீன முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக விவசாயம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், நெல்லுக்கான நிலையான விலை சூத்திரம் ஸ்தாபிக்கப்பட்டுத் தரப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலையீட்டில் விவசாத்திற்கு விடியல் வேலைத்திட்டத்தின் கீழ் 40 வருடங்களின் பின்னர் கிரிதிஓயா திட்டத்திற்குச் சொந்தமான தெற்கு கால்வாயை புனரமைக்கும் பணியில் இன்று (03) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் பிரகாரம், 40 வருடங்களின் பின்னர் கிரிதிஓயா திட்டத்தின் தெற்கு கால்வாயில் 26 கிலோமீற்றர் நீளமான நீர்வாழ் தாவரம் மற்றும் வண்டல் மண் அகற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், அரசாங்கத்திடம் பணம் இல்லாமையினால் 10,000 இற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எரிபொருளையும் வழங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இதற்குத் தேவையான 25 இலட்சம் ரூபா நிதியை கட்டம் கட்டமாக வழங்குவதாகவும், முதற்கட்டமாக 10 இலட்சம் வழங்கப்பட்டதாகவும், இதன் பின்னர் பணிகள் முன்னெடுக்கப்படும் போது ஏனைய நிதி வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நம் நாடு விவசாய நாடு என்பதால், நாட்டில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், முடிந்தால் பெரும்போக சிறுபோக பருவங்களுக்கு மேலதிகமாக இடைக்கால போகத்திற்கும் செல்ல வேண்டும் என்றும், அதனூடாக அதிகளவான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று நாட்டில் உணவுப் பாதுகாப்பை விடுத்து, உணவுப் பாதுகாப்பின்மையே ஏற்ப்பட்டுள்ளதாகவும், நாட்டின் நீர்ப்பாசன முறைமைகளை முற்றாக புனரமைப்பதே தனது முதல் படியாகும் என தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களின் நம்பிக்கையை வென்று ஊழலும், மோசடியும், திருட்டும் இன்றி நாட்டுக்கான பணிகளைச் செய்வதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முறை தனக்குத் தெரியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நெல்லுக்கான நிர்ணய விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்

பாராளுமன்ற சட்டமூலங்கள் தனிநபர் பிரேரணை முன்மொழிவாக கொண்டு வரப்படுகின்றன என்றாலும் அதை நிறைவேற்ற ஆளும் கட்சியின் ஆதரவு தேவை என்றும், எந்நிலையிலும் நெல்லுக்கு உத்தரவாத விலை தரும் விலைச்சூத்திரத்தை வழங்கத் தயாராக இல்லாத இந்த அரசை விவசாய விரோத அரசு என்றே அழைக்கலாம் என்றும், கடந்த அரசாங்கத்தின் போது குறித்த அரசாங்கத்தின் தலைவர்கள் விவசாயிகளை அவமானப்படுத்தி விமான நிலையங்களில் கூட அரிசியை களஞ்சியப்படுத்தி வைத்தனர் என்றும், சஜித் பிரேமதாச ஆகிய தனது வாக்குகளை குறைப்பதற்காகவே இவ்வாறான சதியை மேற்கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வி அதிகாரிகளின் திறமையின்மையால், கல்விப் பொதுத்தராதர மாணவர்களுக்கு பெரும் அநீதி நேர்ந்துள்ளது.

தற்போது உயர்தரப் பரீட்சைக்கான பாடத்திட்டம் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், தற்போதைய நிலவரப்படி 2022 உயர் தர பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் கூட வெளியிடப்படாமல் உள்ளதோடு, 2023 ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சை நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முறையாக நடக்குமாக இருந்தால் இந்த உயர் தர பாட போதனைகளை மார்ச் 2024 வரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் வசதிக்காகவே இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்களின் வசதிக்காக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகள் பலிகடாக ஆக்கப்பட்டுள்ளனர் என்றும், கல்வி அமைச்சின் அதிகாரிகளின் தவறினாலேயே உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கூட தாமதமாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்

அரசாங்கப் பிரதிநிதிகளின் குழு ஒன்று கோயபல்ஸின் ஊடகக் கொள்கையை முன்வைத்து ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் போட்டியிட மாட்டார் என்ற போலிச் செய்தியை கட்டமைத்து வருகின்றனர் என்றும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது கோட்டபாயவுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தன்னை தோற்கடிக்க முயற்சித்தவர்களே இவ்வாறான அறிக்கைகளை கூறிவருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதே இவர்களுக்குக் கூறக்கூடிய பதில் என்றும், தான் மரணத்திற்கு பயப்படும் கோழை அல்ல என்றும் எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ராஜபக்சவுடன் தான் ஒருபோதும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »