தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பிணைத் தொகையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் தவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, குறித்த பிணைத் தொகையை ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து 17 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் ஆசிரியர்கள், அரசாங்க பாடசாலைகளில் நியமனம் பெறாமல், தனியார் பாடசாலைகளில் நியமனம் பெறும் நிலை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பிணைய தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர், அரச பாடசாலையில் அன்றி தனியார் பாடசாலையில் நியமனம் பெற்றால், குறித்த பிணைத் தொகையை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டுமென கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான பிரேரணை தேசிய கல்வியியற் கல்லூரிகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.