கிண்ணியா வலயத்திற்குற்பட்ட காக்காமுனை கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள அப்துல் ஹமீது வித்தியாலய பாடசாலையின் மைதானத்தை தனியார் ஒருவர் அபகரிக்கும் நோக்கில் சுற்று வேலி இட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (19) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த காணியினை பாடசாலை மைதானமாக கடந்த 20 வருட காலமாக பயன்படுத்தி வந்த நிலையில் தனியார் ஒருவர் அம் மைதானம் அவரது காணி என உரிமை கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது பாடசாலை அமைந்துள்ள காணியானது அப்துப் ஹமீது என்பவரினால் பாடசாலைக்கு என அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும், 20 வருடங்களின் பின்னர் தற்போது அவரது மகன் ஒருவரே இவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் மைதானம் தனக்குறிய காணி என உரிமை கோரி அதற்கான சுற்று வேலியினையும் இட்டிருந்தார்.
இது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்திய பொதுமக்கள், அக்காணியானது அரச காணியாகவே இருந்ததாகவும், பின்னர் பாடசாலைக்கு மைதானம் ஒன்று தேவை என்ற வகையில் பற்றைக் காடாக இருந்த அவ்விடத்தினை பொதுமக்கள் துப்பரவு செய்து 20 வருடகாலமாக மைதானமாக பயன்படுத்தி வருவது தொடர்பில் அறியப்படுத்யிருந்தனர்.
அதன் பின்னர் அக்காணியினை அரச காணி என பிரதேச செயலாளரினால் கடந்த மே மாதம் 31ம் திகதி அடையாளப்படுத்தப்பட்டது.
அரச காணியினை மைதானத்திற்கே பெற்றுத்தரக் கோரியும், அரசியலை காணி அபகரிப்புச் செய்பவருக்கு சார்பாக பயன்படுத்துவதற்கு எதிராகம் பொதுமக்களும் மாணவர்களும் சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் "அரச காணி அபகரிப்பை தடுத்து நிறுத்து, பிரதேச செயலாளரே அரச காணியை எமது மைதானத்துக்கே பெற்றுத்தா?, கான்ஸ் அரசியலை உள்ளே புகுத்தாதே, எங்களின் விளையாட்டு நிலம் எங்களின் விளையாட்டுக்கான வளம்" போன்ற பதாதைகளை ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது பாடசாலையிலிருந்து காக்காமுனை பிரதான வீதி சந்தி வரை நடைபவனியாகச் சென்று, பொதுமக்களால் தடைகள் போடப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், போக்குவரத்திற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வேண்டுகோளிற்கு அமைய பிரதேச செயலாளர், கோட்டக்கல்வி அதிகாரியும் வருகை தந்து பிரச்சினைக்கான தீர்வாக மைதானத்தினை அபகரிப்புச் செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாகவும், மாணவர்களை பாடசாலைக்கு அழைத்தும் செல்லுமாறும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தினை முடிவுறுத்தி வைத்தனர்