ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது என்னை தொடர்ச்சியாக நிராகரிக்கும் பட்சத்தில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிப்பேன். – என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தயாசிறி ஜயசேகரவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பு மறுசீரமைக்கப்பட்டு, தலைவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஏதேச்சதிகாரத்தை பயன்படுத்தி அவர் எதையும் செய்யும் வகையில் ஏற்பாடு உள்ளது. அரசியல் உயர்பீடத்துக்கான நியமனம்கூட தலைவரால்தான் வழங்கப்படுகின்றது.
சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர் எனக் கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பேன். செல்ல வேண்டிய அனைத்து இடங்களுக்கும் செல்வேன். சுதந்திரக்கட்சியை விட்டு செல்லும் எண்ணம் இல்லை. சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு முற்படும் தரப்பின் முயற்சி நான் இருக்கும்வரை எடுபடாது. மாற்று கட்சிகளுக்கு செல்லும் எண்ணமும் இல்லை.
என்னை தொடர்ச்சியாக சுதந்திரக்கட்சி நிராகரிக்குமானால் புதியதொரு கட்சியை ஆரம்பிப்பதைதவிர மாற்றுவழி இருக்காது.” – என்றார்.