Our Feeds


Monday, September 11, 2023

ShortNews Admin

ஈஸ்டர் தாக்குதல் - ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முக்கிய அறிவிப்பு



2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து, அதன் பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி உயர்ஸ்தானிகர், 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்ச்சியாக கூறி வருவதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தொடர் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளதாக பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைக்கு சர்வதேச புலனாய்வு அதிகாரிகளின் உதவி பெறப்பட வேண்டும் எனவும், அது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் எனவும், இதற்காக ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது பரிந்துரைகளில் உள்ளடக்கியுள்ளார்.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமுல்படுத்தப்பட வேண்டிய பொறுப்புக்கூறல் பொறிமுறைமை தொடர்பிலான உண்மைகளை மனித உரிமைகள் ஆணையாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறையானது இலங்கையின் நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்காக சரியாகச் செயற்படுவது அவசியமானது என உயர்ஸ்தானிகர் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரச எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், நீண்டகால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் பொறிமுறையில் உண்மையைக் கண்டறிவது மட்டுமன்றி பொறுப்புக்கூறல் செயற்பாடுகளிலும் தெளிவான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பான தனது வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »