Our Feeds


Saturday, September 16, 2023

Anonymous

ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும் - ஐ.நா இலங்கை பிரதிநிதியுடனான சந்திப்பின் பின் மனோ கணேசன்.



ஐநா மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார். இது எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனவும், இலங்கை ஐநா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐநாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார். 


தமுகூ தலைவர் மனோ கணேசன், எம்பி வேலு குமார், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் மற்றும் ஐநா தரப்பில் இலங்கை ஐநா பிரதிநிதி மார்க்-அந்தரே, சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துக்கொண்ட சந்திப்பு தொடர்பில்   மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, 


இலங்கையில்,  தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) ஆகியவை இன்னமும் இழுபறியில் இருக்கின்றன. இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்கு பிரதான காரணம் என நான், முன்னாள் சமீபத்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற முறையில் சொன்னதை ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.   


பதினைந்து இலட்சம் மலையக தமிழர் மத்தியில் சுமார் ஏழரை இலட்சம் பேர் இன்னும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். அவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் தோட்ட தொழிலாளர்கள். இந்த பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களே இலங்கை சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியவர்கள் என்ற தரவுகளுடனான ஆவணத்தை எழுத்து மூலமாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரேக்கு நாம் வழங்கினோம். 


இலங்கை ஐநா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐநாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »