Our Feeds


Saturday, September 23, 2023

SHAHNI RAMEES

குண்டுத்தாக்குதல் இடம்பெறும் வரை முஸ்லிம் சமூகத்தின் எதிரியாகவே சித்தரிக்கப்பட்டேன் - நீதியமைச்சர்

 

பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகளின் செயற்பாட்டை வெளிப்படுத்தியதால்  குண்டுத்தாக்குதல் இடம்பெறும் வரை நான் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன். குண்டுத்தாக்குதல் தொடர்பில் காலம் காலமாக பேசுவதை விட அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க  ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம்,தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் நான் நீதியமைச்சர் பதவியில் இருந்துக் கொண்டு பொறுப்புடன் 'இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் துருக்கி ஊடாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளார்கள் 'என்பதை சபைக்கு அறிவித்தேன்.இதனை நான் வெறும் பேச்சுக்காகவோ அல்லது சாட்சியங்கள் ஏதும் இல்லாமலோ குறிப்பிடவில்லை.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் நீதியமைச்சர் என்ற ரீதியில் நான் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முதன் முறையாக கலந்துக் கொண்டேன்.அப்போது அரச புலனாய்வு பிரிவின் பிரதானி  நிலந்த ஜயவர்தன நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பில் விரிவாக தெளிவுப்படுத்தினார்.பாதுகாப்பு சபை கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஆராய்ந்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு சாதகமான நிலையில் இல்லை ஏதோ பாரிய விளைவு தோற்றம் பெறவுள்ளது என்பதை நான் உணர்ந்தேன்.

2016.11.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெற்றது.அப்போது நீதியமைச்சர் என்ற ரீதியில் நான் 'இலங்கையில் இருந்து ஒரு தரப்பினர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளார்கள், பயிற்சியின் போது இலங்கையர் ஒருவர் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே நாட்டின் பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது.பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் ' என்று உரையாற்றினேன்.

எனது உரையை தொடந்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா எழுந்து 'இவ்வாறு பொய்யுரைத்தால் எமது இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள்' என்றார்.

எனது உரைக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் ஊடக சந்திப்பை நடத்தி நீதியமைச்சர் விஜயதாஸ குறிப்பிடுவது பொய்,தேசிய பாதுகாப்பு பலமாக உள்ளது.எவரும் சிரியாவுக்கு செல்லவுமில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெறவுமில்லை என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் நான் இனவாதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். ஒருசில ஊடகங்களும் நான் முஸ்லிம் சமூகத்தின் விரோதியாகவே என்னை விமர்சித்தன.

சிரியாவுக்கு ஒரு தரப்பினர் சென்று அடிப்படைவாத பயிற்சி பெற்றதை நான் குறிப்பிட்டதை தொடர்ந்து கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் முக்கிய 50 பிரதிநிதிகள் என்னை சந்தித்தார்கள்.கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் நாட்டு மக்கள் மத்தியில் இருந்தது.

பயங்கரவாதி சஹ்ரான் முதலில் காத்தான்குடி பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டு சுதேச முஸ்லிம் ஒருவரையே கொலை செய்தார்.விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை போன்றே  சஹ்ரான் தமது இனத்தவரை கொன்று பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

2016.11.18 ஆம் திகதியில் இருந்து 2019.04.21 ஆம் திகதி வரை நான் இனவாதியாகவே சித்தரிக்கப்பட்டேன்.குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது நான் அமைச்சராக பதவி வகிக்கவில்லை. குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 250 இற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டு,500 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலத்துக்குள் சம்பவம் இடம்பெற்ற பகுதியின் பொலிஸ் நிலைய அதிகாரி நீதவான் நீதிமன்றத்துக்கு  ' பி' அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று  7 நாட்கள் வரை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

2019.04.27 மற்றும் 28 ஆம் திகதிகளின் போது நான் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கும்,பொலிஸ்மா அதிபருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வலியுறுத்தினேன்.அதன் பின்னரே 2019.04.29 ஆம் திகதி பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய பி.அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொண்ட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் நாடு இரத்த வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் இருந்தது.பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  தூரநோக்கத்துடன் செயற்பட்டு நாட்டை பாதுகாத்தார் என்பதை வெளிப்படைத்  தன்மையுடன் குறிப்பிட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய  வனாத்தவில்லு  பகுதியில் ஆயுதங்கள்,வெடிப்பொருட்கள் மீட்பு,மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைப்பு உட்பட கிழக்கு மாகாணத்தில்  இடம்பெற்ற அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தாமல் இருந்தது பிரச்சினைக்குரியது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம்  தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. சனல் 4 தொலைக்காட்சி மீது எனக்கு நம்பிக்கையில்லை அது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.இலங்கை தொடர்பில் கடந்த காலங்களிலும்  பல சோடிக்கப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி சனல் 4 இலங்கைக்கு எதிரான ஆவணப்படங்களை வெளியிட்டது.

சனல் 4 காணொளியை தொடர்ந்து பிள்ளையான் விடுதலை தொடர்பில் பேசப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நீதிபதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பின்னர் நீதிபதிகளின் சுயாதீனத்தன்மை  கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கில் போதிய விசாரணைகள் இல்லாத காரணத்தால் விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டு செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்தது.

இவ்விடயத்தில் எவ்வித  அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். ஆகவே நீதிமன்ற கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்தால் அது ஜனநாயக இருப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.79 பேருக்கு எதிராக 42 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தை கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »