பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமாயின், அழிவடைந்த தமது பஸ்களுக்கும் குறித்த இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரினது வீடுகள் சேதமாக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன.
இதற்காக குறிப்பிட்டளவு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், குறித்த வன்முறைக்கு மத்தியில் பல தனியார் பேருந்துகளுக்கும் தீவைக்கப்பட்டது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக இழப்பீடு வழங்க முன்வந்துள்ள அரசாங்கம், பாதிக்கப்பட்ட தனியார் பஸ்களுக்காகவும் குறிப்பிட்ட இழப்பீட்டை வழங்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.
சுமார் 50 தனியார் பஸ்கள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, மேலும் 50 பஸ்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணம் போதுமானதாக இல்லை. எனினும், தமது பஸ் உரிமையாளர்களில் ஒரு பகுதியினருக்கு கூட இந்த இழப்பீடு கிடைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, அரசாங்கம் பஸ் ஒன்றுக்கு 10 மில்லியன் ரூபா வீதம் செலுத்துமாயின் 50 பஸ்களுக்கான நட்ட ஈட்டு தொகையாக மொத்தமாக 500 மில்லியன் ரூபாவை செலுத்தப்பட வேண்டும். இதுவொரு பெரிய தொகையல்ல என தனியார் பஸ் உரியாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.