Our Feeds


Saturday, September 30, 2023

Anonymous

மொத்தமாக முடங்கவுள்ள அமெரிக்க அரசாங்கம் - என்னதான் நடக்கிறது?



உலகின் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்க அரசானது, பொதுப் பணிகளுக்காக செலவிடுவதற்கான நிதியில்லாததால்,  ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி முடங்கிவிடக் கூடிய அபாயத்தில் இருக்கிறது.


அமெரிக்க அரசு முடங்குவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் அரசு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான காலக் கெடுவை இன்று நள்ளிரவுடன் அமெரிக்க காங்கிரஸ் அவை இழக்கவிருக்கிறது.


அமெரிக்க அரசிடம் பொதுப் பணிகளுக்காக செலவிடுவதற்காக  ஒதுக்கப்பட்ட தொகை இன்றுடன் காலியாகிறது. புதிதாக  நிதி அனுமதிக்கப்படாதபட்சத்தில் பல்லாயிரக்கணக்கான அரசுப் பணிகள், அலுவலகங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் முடங்குவதற்கான அபாயங்கள் அதிகரித்திருக்கின்றன.


இதற்குக் காரணம், நவம்பர் 17ஆம் திகதிவரை அரசுக்கு நிதி வழங்க வகை செய்யும் இடைக்கால மசோதாவை செனட் அவை அங்கீகரித்திருந்த போதிலும், குடியரசுக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.


இந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக மக்களவைத் தலைவர் கெவின் மெக்கார்தி கூறியுள்ளார். ஒருவேளை, அந்த இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், அமெரிக்க அரசு முடங்கும் அபாயத்துடன், அது உலக அளவில் பொருளாதார சந்தைகளை பாதித்து, அதன் மூலம் பல்வேறு நாடுகளின் உள்நாட்டுச் சந்தைகளில் எதிரொலிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


கடந்த வரலாற்றிலிருந்து பார்த்தால், அமெரிக்க அரசு, நிதிப்பற்றாக்குறையால் முடங்குவது இது நான்காவது முறையாக இருக்கும். ஒருவேளை, அமெரிக்க அரசு நிதியின்றி முடங்கினால், அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது, விமான சேவை முதல் பலவும் முடங்கும் நிலை ஏற்படும்.


அமெரிக்க அவையில், எதிர்க்கட்சியினரின் கை ஓங்கிவருவதன் எதிரொலியாக இந்த சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடியரசுக் கட்சியினர் குறைந்த பெரும்பான்மையுடன்தான் அமெரிக்க அவையை கட்டுப்படுத்திவருகிறார்கள், அதே வேளையில், ஜனநாயகக் கட்சியினர் செனட் அவையை ஒரே ஒரு இருக்கையில் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள். 


இதனால், அமெரிக்க அரசானது, செலவழிக்கும் அனைத்து தொகைக்குமான கணக்குகளை இரு தரப்பினரிடமிருந்தும் ஒப்புதல் வாங்க வேண்டும், அந்த கணக்குகளுக்கு இரு அவைகளிலிருந்தும் ஒப்புதல் பெற்றுதான் ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுக்குச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »