Our Feeds


Monday, September 25, 2023

SHAHNI RAMEES

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் - சரத் பொன்சேக்கா

 



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவம்

தொடர்பில் அடிப்படை அறிவு கூட இல்லை. அதன் காரணமாகவே அவர் எனக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் நிலையை விமர்சிக்கின்றார். 


எனக்கு என்றாவது ஒரு நாள் அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,


மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் எனக்கும், சிறானி பண்டாரநாயக்கவுக்கும் எவ்வாறு நியாயம் வழங்குவது என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்ற முன்மொழிவு காணப்பட்டது. 


இவற்றுக்கு இணக்கம் தெரிவித்த பின்னரே பொது வேட்பாளராக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்காக 100 தேர்தல் பிரசார கூட்டங்களை நான் நடத்தியிருக்கின்றேன்.


தேர்தல் கூட்டங்களில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட் ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் பாரிய அர்ப்பணிப்புக்களை செய்தனர். 


ஆனால் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் அனைவருக்கு எதிராகவும் செயற்படத் தொடங்கியவரே மைத்திரிபால சிறிசேன. இராணுவத்தைப் பற்றி அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை. இங்கிலாந்தில் இராணுவத்தளபதியாக பதவி வகிப்பவர்கள் பீல்ட் மார்ஷல் ஆவர். ஆனால் அந்நாட்டு இராணுவத்தில் 80000 சிப்பாய்கள் மாத்திரமே இருப்பர். பீல்ட் மார்ஷல் பதவிக்கும் சிப்பாய்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை.


மஹிந்த ராஜபக்ஷ எனது கேர்ணல் நிலையை நீக்கிய போது, எனக்கு பீல்ட் மார்ஷல் நிலையை வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்தது. 


அந்த வாக்குறுதியையே மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றினார். மாறாக அவரது கால்களில் விழுந்து நான் பீல்ட் மார்ஷல் நிலையைப் பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான சூழலை மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் எவ்வாறு உருவாக்கினர் என்பதை நான் பாராளுமன்றத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். என்றாவது ஒரு நாள் எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு நான் பாடம் புகட்டுவேன். சட்டம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன என்பதை அவருக்கு கற்றுக் கொடுப்பேன் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »