கலாநிதி MHM அஸ்ஹர்
சவுதி அரேபியா, மனிதாபிமான உதவிகள் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது, அந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் உதவிகளை பெற்றுக் கொள்ளாத நாடுகளே உலகில் இல்லை என்றாலும் அது மிகையாகாது.
அந்த வகையில் லிபியாவும், சவுதியின் பல மனிதாபிமான உதவிகளைப் பெற்றுள்ளது, 2018 ஆம் ஆண்டு வரை சவுதி அரேபியா லிபியாவுக்கு, மனிதாபிமான உதவிகள், கல்வித்துறை இன்னும் ஏனைய முன்னேற்றகரமான நிகழ்ச்சித் திட்டங்கள் என 10 திட்டங்களுக்காக 5,734,571 டாலர்களை வழங்கியுள்ளது.
கடந்த 10/09/2023 ஞாயிற்றுக்கிழமை லிபியாவை ஒரு மிகப்பெரும் சூறாவளி தாக்கியது, அதன் மூலமாக ஆயிரக்கணக்கான உயிர் சேதங்களும், பொருட்சேதங்களும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். லிபியா கண்ட சூறாவளிகளில் இதுவே மிகக் கடுமையானதாகும், இந்த சூறாவளிக்கு தான்யால் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையை எதிர்கொள்வதற்காக, சவுதி அரேபியா மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களும், பிரதமர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்களும் (மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மையத்தை) உடனடியாக சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள லிபிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்கும் படி பணித்துள்ளார்கள்.
அந்த அடிப்படையில் நேற்று 16/09/2023 சனிக்கிழமை சவுதி அரேபியாவின் முதலாவது நிவாரண விமானம், 90 டொன் உணவு மற்றும் தங்குமிட உதவிகளை சுமந்து சென்று, லிபிய பென்காசி நகரிலூள்ள, பெனீனா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இவ்வுதவிகள் சில வாரங்களுக்கு தொடரும் என சவுதி அரேபியாவின் நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.