Our Feeds


Monday, September 4, 2023

ShortNews Admin

அதிர்ச்சி ரிப்போட் - இலங்கையில் ஒரு நாளைக்கு 9 பேர் தற்கொலை - கடந்த வருடம் மாத்திரம் 3,406 பேர் தற்கொலை



(எம்.வை.எம்.சியாம்)


நாட்டில் தற்கொலை செய்து கொள்வோரில்

 83 வீதமானவர்கள் ஆண்கள்

• 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள்

• கடந்த வருடத்தில் மாத்திரம் 3,406 பேர் தற்கொலை

• நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை!

லங்கையில் 4 மணித்தியாலத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் 40 வீதமானோர் கல்வி கற்றவர்கள் எனவும்  அவர்களுள் 22 பேர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எனவும்  குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வோர் தொடர்பான செய்திகள் அண்மை நாட்களில் அதிகளவில் பதிவாகியுள்ளது. 

தனிநபர்கள் தற்கொலை செய்து கொள்வதுடன் சில சந்தர்ப்பங்களில் குடும்பமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.  இந்நிலையில் இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் போது தற்கொலை செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருகின்றமை வெளிக்கொணரபட்டுள்ளது.

நாட்டில் தற்கொலை செய்துக்கொள்ளும் தரப்பினரின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 10 வீதத்தால்  தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் வருடமொன்றுக்கு  3000 இற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த  அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள்  கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன்  உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தொழில் செய்வோர்களில் விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினர் இந்த தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையை பொருத்தமட்டில்  4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றார்.

இதேவேளை இது தொடர்பில் மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே அதிகளவிலான தற்கொலை சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்றாலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் தரப்பினரை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். இதன் மூலமாகவே இந்த மரணங்களை தடுக்க முடியும்.

ஒருவர் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மனநோயாளர் என அடையாளம் காணப்படாமையே இந்த நிலைக்கு மற்றுமொரு காரணமாகும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முறையாக சிகிச்சை வழங்கப்படாமையும் இதற்கு காரணமாக அமைய முடியும்.

ஒருவர் பொருளாதார ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறும் போது பலர் இதனை கருத்திக்கொள்வதில்லை. அவர்கள் கூறும் விடயங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 

தற்கொலை செய்ய போவதாக கூறும் ஒருவருக்கும் நாம் உதவிகளை செய்வதில்லை. பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது?  மன அழுத்தத்தை எவ்வாறு இல்லாமல் செய்வது போன்று நாம் கவனம் செலுத்தும் போது தற்கொலைகள் இடம்பெறுவதை குறைக்க முடியும்  என அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »