Our Feeds


Wednesday, September 13, 2023

ShortNews Admin

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 7ம் நாள் அகழ்வாய்வு : 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் விடுதலைப்புலிகளின் சைனட்குப்பியும் 2 இலக்கத் தகடுகளும் மீட்பு



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13) இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன.


இந்நிலையில் ஏழுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 09மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுப் பணிகளுக்கென, 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கடந்தவாரம் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள முடிந்ததுடன், இந்தவாரமும் அகழ்வுப் பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், தொடர்ந்து அடுத்தவாரமும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டால் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நிதி போதுமானதாக உள்ளதாகவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13) நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம்நாள் அகழ்வாய்வில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன.

இந்த புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடவேண்டியுள்ளது.

அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, சில நாட்களில் ஓரிரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளையே அகழ்ந்தெடுக்கமுடிகின்றது.

குறித்த மனிதப்புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகளையும், தடையப்பொருட்களையும் எடுத்தாலே, இது தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும்.

எனவே குறித்த அகழ்வாய்வுப் பணிகளின் காலத்தை வரையறுக்க முடியாதுள்ளது.

ஏற்கனவே அகழப்பட்டுள்ள குழியிலிருந்து மனித எச்சங்களையும், தடையப்பொருட்களையும் முழுமையாக அகழ்வாய்வு செய்து எடுப்பதற்கு ஒரு சில வாரங்கள் நீடிக்கலாம் என நினைக்கின்றேன்.

அதனைவிட இன்னும் மேலதிகமாக குழியைத் தோண்டி அகழ்வாய்வுகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு காலம்எடுக்கும் எனக்கூறமுடியாது.

இந்தப் புதைகுழி தொடர்பிலான அறிக்கைகள், அகழ்வாய்வு செய்யும் குழுவினால், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும்.

அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடையப்பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பிரேதசாலையில், விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்விற்கென 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைகப்பெற்றது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தி, புதைகுழிக்குரிய தகரப் பந்தல், தங்குமிட வசதி, மலசலகூட வசதி உள்ளிட்ட விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒருக்கின்ற நிதி மூலத்தை வைத்து கடந்த வாரத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,  இந்தவாரத்திலும் அகழ்வாய்வுகளை மேற்கொண்டுவருகின்றோம்.

அடுத்தவாரமும் அகழ்வாய்வுகளை மேற்கெிள்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமாகவுள்ளது.

தொடர்ந்து அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதவான் உத்தரவிடுவாரெனில் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.

எடுக்கப்பட்ட தகட்டிலக்கம் தொடர்பாக, அவை எந்தக் காலத்துக்குரியவை போன்ற விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அதன்பின்னர் தகட்டிலக்கங்கள் தொடர்பன விபரங்கள் அறியத்தரப்படும் என்றார்.

மேலும் இந்த அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »