Our Feeds


Wednesday, September 20, 2023

SHAHNI RAMEES

சேவையில் இல்லாத 50 சொகுசு பஸ்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை

 


சேவையில் இல்லாத 50 சொகுசு பஸ்களை இன்னும் 6 மாதங்களில் மீண்டும் சேவையில் இணைக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



சேவையில் இல்லாத குறித்த சொகுசு பஸ்களால் இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) நாளொன்றுக்கு 5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



இலங்கை போக்குவரத்து சபையின் கட்டுபெத்த அதி சொகுசு போக்குவரத்து சேவை பஸ் நிலையத்தை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.



பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளாலும், உதிரிப்பாகங்கள் இல்லாததாலும் தற்போது சேவையில் ஈடுபடாத 50க்கும் மேற்பட்ட சொகுசு பஸ்கள் இந்த கட்டுபெத்த அதி சொகுசு போக்குவரத்து சேவை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளமையை அறிந்து, இந்தப் பஸ்களை விரைவாக சீர்செய்து சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசகராக பொறியியலாளர் குஷான் வெகொடபொலவை அவர் நியமித்துள்ளார்.



இது குறித்து அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையில், 

“10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக அரசாங்கம் இந்த பஸ்களை இலங்கைக்கு கொள்வனவு செய்தது. பின்னர் இலங்கை போக்குவரத்து சபையிடம் கையளித்தது. அந்த பஸ்களின் உத்தரவாத காலம் 8 ஆண்டுகளே ஆகும். தற்போது இந்த பஸ்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.



இவற்றில் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் கட்டுபெத்த பஸ் நிலையத்தில் நிறுத்தப்படுவதால், நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் லாபம் ஈட்ட முடியும்.



எனவே குறித்த பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் விசேட முயற்சியை மேற்கொண்டார். ஆறு மாதங்களில் இந்த 50 பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக, லக்தீவ பொறியியல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் உயர் தகுதியும் அனுபவமும் கொண்ட ஆட்டோமொபைல் பொறியியலாளரான குஷான் வெகொடபொல, SLTB சொகுசுப் பயணப் பிரிவுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 



அடுத்த ஆறு மாதங்களில் இந்த சொகுசு பஸ்களை மீண்டும் இயக்குவதற்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தேவையான அறிவுறுத்தல்களுக்காக இந்த பஸ்களை தயாரித்த சீன நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.



இதன்போது பொறியியலாளர் குஷான் வெகொடபொல கருத்து தெரிவிக்கையில், “இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிக லாபம் ஈட்டக்கூடிய 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த இடத்தில் உள்ளன. குறித்த பஸ்களின் உதிரிப்பாகங்கள் பாவனைக்குதவாத நிலையில் உள்ளன. அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, விரைவில் இந்தப் பஸ்களை மீள சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் என்றார்.



இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் கருத்து தெரிவிக்கையில், 

“பொதுநலவாய மாநாட்டின் பின்னர் அப்போதைய அரசாங்கம் 69 பஸ்களை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கியது. இதில் ஒரு பஸ் விபத்து காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. நான் தலைவராக பொறுப்பேற்ற போது 37 பேருந்துகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருந்தன. இந்த பஸ்களை சீர் செய்ய இலங்கை போக்குவரத்து சபையின் தொழில்நுட்ப வல்லுனர்களை பெற முயற்சித்தோம், ஆனால் இந்த பஸ்களுக்கு சிறப்பு பொறியியல் அறிவு தேவைப்பட்டதால் அது அவர்களால் முடியவில்லை. இதுபற்றி அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பான நிபுணத்துவம் கொண்ட பொறியியலாளரை நியமிக்க ஏற்பாடு செய்தார். அந்த ஆலோசனையின் மூலம், அடுத்த ஆறு மாதங்களுக்குள், இந்தப் பேருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »