Our Feeds


Thursday, September 14, 2023

SHAHNI RAMEES

சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த 50 தீவுகளின் பட்டியலில் இலங்கை

 

சுற்றுலா இணையத்தளமான பிக் செவன் ட்ராவல் (Big Seven Travel) இணையத்தளம் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கையை பெயரிட்டுள்ளது. 



2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இந்த தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதன்படி, 2023ஆம் ஆண்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த 50 தீவுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.



இந்தப் பட்டியலில் இலங்கை 13ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஸ்பெயின், மலேசியா, மாலைதீவு, பாலி, இந்தோனேஷியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேலாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சுற்றுலா பயணிகளுக்கு நட்புரீதியான விருந்தோம்பல் மற்றும் சுவையான உணவு மற்றும் பானங்களை வழங்குவதுடன், கடற்கரையின் அழகு மற்றும் புராதன சிதைவுகள் என்பவற்றை பார்வையிடுவதற்கான வாய்ப்பையும் இலங்கை வழங்குவதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு இந்த மாதத்தின்; முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.



அதன்படி, கடந்த முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை, மொத்தமாக 46,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்நிலையில், கடந்த 12ஆம் திகதிவரை இந்த ஆண்டில் மொத்தமாக 950,626 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.



இந்த மாதத்தில் குறைந்தது 120,201 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான தமது இலக்கில் 39 சதவீதத்தை இந்த மாத இறுதியில் அடைய முடியுமென இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »