இலங்கை அரசாங்கத்துடனான அனைத்து இராணுவ பாதுகாப்பு உறவுகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் துண்டிக்க வேண்டும் என தமிழ் அகதிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை அரசாங்கத்தை 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தும் அதிர்ச்சி தகவல்கள் ஐக்கிய இராச்சியத்தில் ஒளிபரப்பாகியுள்ளன.
ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் கவரப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தற்கொலை குண்டு தாக்குதல்களில் ஈடுபட்டது.
269 பேரை கொலை செய்து 500க்கும் அதிகமானவர்களை காயப்படுத்தியது.
எனினும் தற்போது இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு துறை பணியாளர் தற்போது உண்மைகளை அம்பலப்படுத்துபவராக மாறி இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் சுரேஸ் சாலேக்கும் அடிப்படைவாதிகளுக்கும் இடையில் 2018 இல் சந்திப்பை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கான சதி திட்டத்தின் ஒருபகுதியே இந்த தாக்குதல் என ஹன்சீர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததை செப்டம்பர் ஐந்தாம் திகதி சனல் 4 வெளியிட்டது.
2009 இல் இலங்கையின் வடக்குகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை உச்சத்திலிருந்தவேளை இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ச பதவியிலிருந்தார்.
அவரது சகோதரர் பாதுகாப்பிற்கு பொறுப்பாகயிருந்தார். மனிதப் படுகொலையை தண்டனையின் பிடியிலிருந்து தப்பிய வண்ணம் முன்னெடுத்தார்.
எனினும் அவரது மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைய தொடங்கியதை தொடர்ந்து 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.
நான்கு வருடத்தின் பின்னர் மற்றுமொரு தேர்தல் இடம்பெறவிருந்த சமயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டில் அச்ச நிலையை உருவாக்கியது, இலங்கை அரசியல் ராஜபக்சாக்களிற்கு சாதகமாக மாறியது.
தேசிய பாதுகாப்பு என்ற தளத்தில் நின்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்.
கோட்டாபய யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளார், 2009 யுத்தத்தின் போது பொதுமக்களை உயர் பாதுகாப்பு வலயத்தை நோக்கி நகர்த்தியதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன.
தமிழ் தேசிய விடுதலைக்கான யுத்தத்தின் இறுதி தருணங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டார்கள்.
இனப் படுகொலை மூலமே ராஜபக்சாக்கள் தாங்கள் வலிமையானவர்கள் என்ற அபிப்பிராயத்தை உருவாக்கினார்கள் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு காணப்பட்டது.
பத்து வருடங்களிற்கு பின்னர் மதவெறியை தூண்டும் அரசாங்கத்தின் இலக்கிற்கு தமிழ் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்கள் பலியானார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றிபெற்றதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளவர்களை இடம்மாற்றி விசாரணைகளை குழப்பினார் என சனல் 4 இன் ஆவணப்படத்தில் உண்மைகளை வெளிப்படுத்திய மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவமயப்படுத்தப்பட்ட தேசம் என்பது வெறுமனே ராஜபக்சாக்களின் உருவாக்கம் இல்லை, அது சிங்கள பேரினவாதத்தின் வளர்ச்சியாக உருவாக்கப்பட்டது.
1948 முதல் தமிழர்களும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களும் அதிகளவு புறக்கணிக்கப்பட்டு பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்த புதிய ஆதாரங்கள் இலங்கை சிறுபான்மையினத்தவர்களிற்கு பாதுகாப்பான நாடாக மாறவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.
இலங்கை அரசாங்கத்துடனான அனைத்து இராணுவ பாதுகாப்பு உறவுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் துண்டிக்க வேண்டும் என தமிழ் ஏதிலிகள் பேரவை அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது.
அவுஸ்திரேலியா இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக வழங்கப்படும் பொருளாதார உதவி திட்டங்களை நிறுத்த வேண்டும், இலங்கையிலிருந்து வரும் படகுகளை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும், புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும், நிரந்தர பாதுகாப்பை வழங்கவேண்டும், அனைத்து இலங்கை அகதிகளுக்கும் பிரஜாவுரிமையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.