Our Feeds


Sunday, September 10, 2023

ShortNews Admin

செனல் - 4 கோட்டாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பௌத்தத்திற்கும் எதிராக செயல்படுகிறது. - கலாநிதி குணதாச



கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.


அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளில் 9 இலட்ச வாக்குகள்  மட்டுமே கத்தோலிக்க வாக்குகளாக உள்ள நிலையில் அந்த வாக்குகள் கிடைக்காது விட்டிருந்தால் கூட அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதை சனல்-4 தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறான பொய்கள் பற்றி தொடர்ச்சியாக பேசினால் சர்வதேசம் தொடர்ச்சியாக சேற்றை வாரியிறைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல்-4 ஊடக நிறுவனம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சனல்-4 ஊடக நிறுவனம் எமது நாட்டின் அரச தலைவர்கள், மற்றும் படைவீரர்கள் சம்பந்தமாக தொடர்ச்சியாக எதிர்மறையான விடயங்களையே வெளியிட்டு வருகின்றது. அதுவொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது.

ஆகவே, அந்த விடயம் சம்பந்தமாக தொடர்ச்சியாக பேசுவதால் எவ்விதமான பயனுமில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பேசினால் தொடர்ந்தும் அந்த நிறுவனம் இலங்கை மீது சேற்றை வாரியிறைக்கும் செயற்பாட்டையே மேற்கொள்ளும்.

அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில் சாட்சியமளிப்பவர் ஒரு முஸ்லிம் பிரஜை. அவர் தற்போது சுவிஸ்ட்சர்லாந்தில் உள்ளார். அவர் தன்னுடைய புகலிடக் கோரிக்கையை உறுதி செய்து கொள்வதற்காக இவ்விதமான பொய்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்.

அவர்வெளியிடுகின்ற பொய்களை சனல்-4 நிறுவனம் ஆராயாது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. முதலில் அந்த நிறுவனம் கோட்டாபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து செயற்படவில்லை. அது ஒட்டுமொத்த பௌத்தர்களயும், சிங்கள இனத்தினையும் இலக்குவைத்து தான் செயற்படுகின்றது.

அடுத்து, கோட்டாபாய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தான் 69இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றார் என்பது பொய்யான விடயமாகும்.

அவருக்காக தேசிய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிரசாரம் செய்தன. பௌத்த தலைவர்கள் குரல் எழுப்பினார்கள். அதனடிப்படையில் தான் அவர் வெற்றி பெற்றார்.

இலங்கையில் ஆகக் கூடுதாலாக 9 இலட்சம் கத்தோலிக்க வாக்குகளே உள்ளன. அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாது விட்டால் கூட கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருப்பார். அதேநேரம், 9 இலட்சம் வாக்குகளுக்காக இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. 

இந்த யாதார்த்தினை சனல்-4 புரிந்து கொள்ள வேண்டும். மேலும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளார். அதற்கு அரசாங்கமும் தயார் என்று அறிவித்திருக்கின்றது. இந்தச் செயற்பாடு படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் முயற்சியாகும். 

நாட்டின், சிங்கள, பௌத்த அபிமானங்களை கேள்விக்கு உட்படுத்தும் செயற்படாகும். ஆகவே, சனல்-4 தொடர்பில் பேசுவதே பயனற்றது. அது புனையப்பட்ட கற்பனையாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »