Our Feeds


Wednesday, September 27, 2023

News Editor

இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 4,000 க்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள்



இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றிற்குள் தற்போது 4,000 க்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படுவதுடன், இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

 

நிதியமைச்சில் நேற்று ( 26) நடைபெற்ற ‘புதிய அபிவிருத்தி அணுகுமுறைக்கான அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு’ மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

               

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றை இயக்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தற்போதைய பணியாளர்கள் போதுமானவர்கள்.

 

"பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், மூவாயிரத்து 292 அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 2,100 பேர் பணியிலுள்ளனர். ஆயிரத்து 192 பதவி வெற்றிடங்கள் உள்ளன.

இதேவேளை, இலங்கை மின்சார சபையில் 24 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் பதவிகள் இருந்தாலும் 21 ஆயிரம் ஊழியர்களே சம்பளப் பட்டியலில் உள்ளனர்.

 

குறிப்பிட்ட சேவைப் பணிகளுக்காக 3,000 வெளி பணியாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும் 3,000 பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

 

தற்போதைய அரசாங்கம் இந்த வெற்றிடங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, நாட்டின் நிலையான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு மக்கள் விரும்பத்தகாத ஆனால் அவசியமான தீர்மானங்களை எடுத்துள்ளது.

 

"அரசியல் ஆதாயத்திற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குள் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஆயிரம் பேருக்கு என்னால் வேலைவாய்ப்பு வழங்க முடியும். ஆனால் அத்தகைய நடவடிக்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானது. அரசியல் நலன்களை விட இந்த நிறுவனங்களின் நேர்மைக்கே நான் முன்னுரிமை அளிக்கிறேன்" – என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »