கடந்த 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையினால் “வேகமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்“ என்ற தலைப்பில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடக விழிப்புணர்வு சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 30 வருட கால யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் ரூபாய் அளவில் வீதி விபத்துக்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக செலவிடப்படுகின்றது.
2016 முதல் 2018 வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் இலங்கையில் 24,786 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் ஏறக்குறைய ஏழு முதல் எட்டு பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் அவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஆவர்.
இந்த விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாளானோர் இளைஞர்களாக காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
வீதி விதிமுறைகளை அமுல்படுத்தினால் வீதி விபத்துகளை 10 சதவீதம் குறைக்க முடியும்.
வீதி விபத்துகளை குறைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் வீதி விபத்துகளை விரைவாகக் கட்டுப்படுத்த நடைமுறைகளை கையாள வேண்டும், இல்லையெனில் அவை சமூக மற்றும் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உரையாற்றுகையில்,
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏறக்குறைய 25 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் ஆனால் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது.
விபத்துகளைத் தடுப்பது ஒரு தேசியப் பொறுப்பாகும், மேலும் விபத்தை குறைக்கும் நோக்கத்தை அடைய ஊடகங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
எங்களிடம் பாதுகாப்பான வீதி கணினி கட்டமைப்பு இல்லை, ஓடுபாதைகள் இல்லை, பாதசாரிகள் நடப்பதற்கு சிறிதளவு கூட நடைபாதைகள் இல்லை மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலங்கையில் வீதி வலையமைப்பைப் பயன்படுத்த முடியாது. எவ்வாறாயினும், விபத்துகளைத் தடுப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்தனர்.
தொடர்ந்து கூறுகையில், பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக வீதி விபத்துகளைத் தடுக்க வீதி பொலிஸ் செயலியை அறிமுகப்படுத்த பொலிஸ் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் விரைவில் இந்த செயலியை அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.