Our Feeds


Tuesday, September 12, 2023

ShortNews Admin

ஆஸாத் மௌலானா என்னை ஏமாற்றி விட்டார் - சாய்ந்தமருது 35 வயது இளம் பெண் வழக்குத் தாக்கல் - நடந்தது என்ன?



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்  செய்துள்ளார்.


இந்த முறைப்பாட்டிற்கமைய இன்று (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்தி வைத்தார்.



அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரே தனது சகோதரர் சகிதம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.



அதில்  போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து  தன்னை மறுமணம் செய்துள்ளதாகவும் பின்னர்  மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து  குடும்பம் நடாத்தினார் எனவும் பின்னர் தன்னை  ஏமாற்றி தலை மறைவாகி இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.



 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக இந்த ஆசாத் மௌலானா தென்பட்டதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் அம்முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.



அத்துடன் 2019.09.29 திகதி அன்று குறித்த திருமணம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் எனும் பகுதியில் நடைபெற்றுள்ளதுடன் வரவேற்பு உபசாரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும் தற்போது இறக்காமம் பள்ளிவாசல் குறித்த திருமணம் குறித்து மறுத்துள்ளதுடன் போலியாக தமது பள்ளிவாசல் ஆவணம் தயார் செய்யப்பட்டு இம்மோசடி திருமணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.



மேலும் குறித்த பெண்ணை ஆஸாத் மௌலானா தனது முதலாவது திருமணத்தை மறைத்து மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக இந்த ஆசாத் மௌலானா உள்ள நிலையில் அவர் மீது பெண் ஒருவர் இரண்டு வருடத்திற்கு பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் மேற்கொண்டமை பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.



இது தவிர குறித்த பெண்ணின் குற்றச்சாட்டினை முன்வைத்து தற்போது ஆஸாத் மௌலானாவின் வெளிநாட்டு தஞ்சம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படுதல் மற்றும் அவரை ஒரு ஏமாற்று பேர்வழியாக இனங்காட்டி இவ்வழக்கினை மேலும் வலுவாக்குவதற்கு மூன்றாம் தரப்பு ஒன்று முயற்சி செய்து வருவதாகவும் அறிய முடிகின்றது.



இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படமானது



கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது.



அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக நீண்ட காலம் செயல்பட்ட ஹன்ஸீர் ஆசாத் மௌலானா, சேனல் 4 ஆவணப்படத்தில் வெளியிட்ட தகவல்கள், இலங்கை அரசியலிலும் அதற்கு வெளியிலும் கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.


  

ஆசாத் மௌலானா 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாணந்துறையிலுள்ள தனது மாமியின் (தந்தையின் சகோதரி) மகளை திருமணம் செய்தார். பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்தார். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே அந்தப் பெண்ணுடன் விவாகரத்தாகி விட்டது.



பிள்ளையான் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கத் தொடங்கிய பின்னர், அதன் பேச்சாளராக ஆசாத் மௌலானா நீண்ட காலம் செயல்பட்டார். அதேவேளை பிள்ளையானின் நிதிப் பொறுப்பாளராகவும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்த காலத்தில் அவரின் பிரத்தியேக செயலாளராகவும் ஆசாத் மௌலானா பணியாற்றினார்.



இவ்வாறு பிள்ளையானுடன் நீண்டகாலம் நெருக்கமாக இருந்து வந்த ஆசாத் மௌலானா, 2022ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் ஐரோப்பிய நாடொன்றில் உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சேனல் 4 ஆவணப்படத்துக்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முறைப்பாடு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசாத் மௌலானா சமர்ப்பித்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.



(பாறுக் ஷிஹான்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »