(எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்த 18 மாதங்களுக்குள் 348 விசேட வைத்திய நிபுணர்கள் சேவையை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சர் நியமித்த குழுவொன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைவாக 272 விசேட வைத்திய நிபுணர்கள் சம்பளம் இல்லாமல் விடுமுறை பெற்று நாட்டை விட்டு சென்றுள்ளனர். மேலும் 76பேர் எந்த அறிவிப்பும் இல்லாமல் சேவைக்கு வராமல் நீங்கிக்கொண்டுள்ளனர்.
அத்துடன் தரப்படுத்தப்பட்ட 850 வைத்திய அதிகாரிகள் ஒரு வருட காலத்துக்குள் அதாவது 2022 ஜூன் 1ஆம் திகதியில் இருந்து 2023 மே 31 வரையான ஒரு வருட காலத்தில் சேவையை விட்டு சென்றுள்ளதுடன் அவர்களில் 544பேர் சம்பளம் இல்லாமல் விடுமுறை பெற்றுக்கொண்டு வெளிநாடு சென்றுள்ளனர். அதேநேரம் 197பேர் அறிவிக்காமல் சேவையை விட்டுச் சென்றுள்ளனர்.
அத்துடன் இந்த காலப்பகுதியில் 109பேர் தொழிலை விட்டு விலகிச்சென்றுள்ளதாகவும் குறித்த குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வது தொடர்பாக தேடிப்பார்ப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைவாக சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்டிருந்த உபகுழு இந்த தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறது