பிறந்து 2 மாதங்களேயான குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக தியாகம் செய்த மருத்துவர் ஒருவரின் மனிதாபிமானம் தொடர்பான செய்தியொன்று சிங்கள ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி மருத்துவமனை மருத்துவர் ஒருவர், 02 மாதக் குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில், தன் நோயையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்ற வந்த நிலையில் குழந்தை பிழைத்துக் கொண்டாலும் குறித்த மருத்துவர் உயர் இரத்த அழுத்தத்தினால் உயிரிழந்துள்ளார்.
திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் கண்டி மருத்துவமனையின் 4ம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதக் கைக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர் பாஹிமா, பின்னர் இரத்த அழுத்தம் அதிகரித்து உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்து குழந்தையை மீட்ட பிறகு, மருத்துவர் பாஹிமாவின் நிலை மோசமடைந்ததால், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரது இரத்த அழுத்தம் ஏற்கனவே 200 ஐ தாண்டியிருந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்டி அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் எனும் மருத்துவர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுவதுடன் அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி அவருடைய மூத்த மகள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக தலையில் உள்ள நரம்பு வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பல நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் இந்நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவையாற்றி மருத்துவர் பஹீமா உயிரிழந்துள்ளமையை சிங்கள ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக்கி வருகின்றன.
இவ்வளவுக்கும் மருத்துவர் பஹீமா காப்பாற்றியது ஒரு சிங்கள தாயின் 2 மாதக் குழந்தையைத் தான் என்பது மேலதிக தகவலாகும்.
அன்று நாட்டின் கண்டிய மன்னரை பாதுகாத்து தன் உயிர் நீத்தார் பாத்திமா. இன்று சிங்கள தாயின் குழந்தையை பாதுகாத்து தன் உயிர் நீத்தாள் பாஹிமா.