Our Feeds


Wednesday, September 27, 2023

SHAHNI RAMEES

கூகுளுக்கு இன்று வயது 25..!

 


நெட்டிசன்களின் வாழ்வின் புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்தும் இணையத்தில் தவிர்க்க முடியாத தேடுபொறியாகக் காணப்படும் கூகுள் இன்று தனது 25 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.

கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர்  கடந்த 90 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டப்படிப்பை படித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த இருவரும் உலகளாவிய தேடுத் தளமொன்றை ஆரம்பிக்கும் நோக்கில், தமது அறையிலிருந்தவாறே முயற்சித்துள்ளனர்.

இந்த முயற்சியானது, கூகுள் தேடுத்தளம் ஆரம்பிக்க வழிவகுத்துள்ளது. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கூகுள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இணையத்தை இன்று நாம் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்கியதில் கூகுள் பங்கே அதிகம். 1990 ஆம் ஆண்டுகளில் உலக மக்களின் பயன்பாட்டிற்கு இணையம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அது இன்றைக்கு நாம் பயன்படுத்தும் வகையில் இவ்வளவு எளிமையாக இல்லை.

இன்று நாம் ஒரு வலைத்தள முகவரியை தவறாகக் குறிப்பிட்டாலும், அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு நமக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது கூகுள் தேடுபொறி. 

ஆனால், 1990 ஆண்களில், முதன் முதலாக இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட போது சரியான வலைத்தள முகவரிகளைக் கொண்டு மட்டுமே இணையத்தை அணுக முடிந்தது.

இணையம் என்பது ஒரு கடல். அந்தக் கடலில் நமக்குத் தேவையானதைத் தேடி எடுக்க உதவும் ஒரு கருவியே தேடுபொறி. இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தேடுபொறிகள் எதுவும் இல்லை. ஒரு வலைத்தளத்தின் முழுமையான முகவரி நமக்குத் தெரிந்திருந்தால், அதனை உள்ளீடு செய்து இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது.

இப்படித் தேடுபொறியற்ற இணையத்தில் பயனர்கள் வேண்டியதைப் பெறுவதை வழங்கும் வகையில் ஆரம்ப காலத்தில் பல்வேறு தேடுபொறிகள் உருவாக்கப்பட்டன.

கூகுளின் வருகைக்கு முன்பு யாகூ, எக்ஸைட், லைகோஸ் மற்றும் ஆஸ்க் ஜீவ்ஸ் எனப் பல்வேறு தேடுபொறிகள் இணையவாசிகளின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், கூகுளின் வருகை அந்தத் தேடுபொறிகளின் அழிவுக்கு ஆரம்பமாக அமைந்தது.




லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்

1998 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 27 இல்  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டது கூகுள்.

பிற தேடுபொறிகளைப் போல சீரற்ற முறையில் தேடல் முடிவுகளைக் காட்டாமல், இணையவாசிகள் எந்தத் தளத்தை அதிகளவில் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் பட்டியலிட்டு தேடல் முடிவுகளைக் காட்டியமையானது ஏனைய தேடுபொறிகளில் இருந்து கூகுளைத் தனித்துக் காட்டியது.

2004ல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலக தேடுபொறி சந்தையின் 80 சதவீத சந்தைப் பங்குகளை வைத்திருக்கிறது. தேடுபொறிகள் சந்தையில் கூகுளுக்குப் போட்டியாகக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த சேவையுமே இல்லை.

ஒரு தேடுபொறியாகத் தொடங்கப்பட்டாலும், ஒரு தேடுபொறியாக மட்டுமே நின்று விடவில்லை கூகுள். இன்று 50க்கும் மேற்பட்ட இணைய சேவைகள் மற்றும் கருவிகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம்.

தொடர்ந்து பயனர்களின் தேவைக்கும், சந்தையின் மாற்றத்திற்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டே வந்ததும், 25 ஆண்டுகள் கழித்து கூகுள் வெற்றிகரமாக நிலைத்திருப்பதற்கான காரணம்.

கடந்தாண்டு நவம்பரில் புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தி இணையத்தையே புரட்டிப் போட்டது ஓபன்ஏஐ. கூகுள் போன்ற தேடுபொறிகளின் முடிவு இது என்று கூட சிலர் கருத்துக் கூறினார்கள்.

ஆனால், இன்று அந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தேடுபொறி சேவையுடன் இணைத்து, அதனைத் தன்னுடைய அங்கமாக மாற்றி புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.

எந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவியால் கூகுளின் தேடுபொறி சேவை பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டதோ, அதே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று உயரப் பறக்கத் தொடங்கியிருக்கிறது கூகுள்.

தேடுபொறி மட்டுமின்றி, கூகுள் மீட் முதல் போட்டோஸ் வரை தங்களுடை அனைத்து சேவைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

இத்தகைய வளர்ச்சியடைந்திருக்கும் கூகுள் ஒரு தவறிலிருந்து தான் தொடங்கியது. ஆம், தொடக்கத்தில் தங்களுடைய தேடுபொறிக்கு 'Googol' என்றே பெயர் வைக்கத் திட்டமிட்டிருந்தனர் கூகுளின் நிறுவனர்கள்.

ஆனால், தவறுதலாக 'Googol' என்பதற்குப் பதிலாக 'Google' எனத் தட்டச்சு செய்துவிட்டனர். ஒரு தவறிலிருந்து தொடங்கி, மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கும் கூகுளுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »