குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகையின் உலகின் 21 சிறந்த 'A' தர மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, 1994ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மத்திய வங்கி ஆளுநர்கள் தொடர்பான தரப்படுத்தலை வெளியிட்டு வருகிறது.
உலகின் 101 முக்கிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களை உள்ளடக்கியதாக இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய ஸ்திரத்தன்மை மற்றும் வட்டி விகித முகாமை போன்ற பகுதிகளில் வெளிப்படுத்தப்படும் பெறுபேறுகளின் அடிப்படையில் "A" முதல் 'F' வரையிலான தரங்கள் வழங்கப்படுகின்றன.
"A" என்பது சிறந்த செயல் திறனுக்காகவும் 'F' என்பது முழுமையான தோல்விக்காகவும் வழங்கப்படுகிறது.
அதற்கமைய, "A" 10, "A" மற்றும் A- ஆகிய தரங்களின் கீழ் சிறந்த 21 நாடுகின் மத்தியவங்கியின் ஆளுநர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், A- என்ற தரத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் A 10 தரத்தின் கீழ் இந்தியா, சுவிட்ஸர்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.
அத்துடன், A தரத்தின் கீழ் பிரேசில், இஸ்ரேல், மொரிசியஸ், நியூஸிலாந்து, பெரு மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் உள்ளடங்கியுள்ளன.
A– தரத்தின் கீழ் இலங்கை, கொலம்பியா, ஐஸ்லாந்து, இந்தோனேஷியா, மெக்சிகோ, மொரோக்கோ, நோர்வே, தென் ஆபிரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தரப்படுத்தலுக்கமைய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சுவிட்சர்லாந்தின் தோமஸ் ஜே ஜோர்டானும் மூன்றாம் இடத்தில் வியட்நாமின் குயென் தி ஹோங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.