உயிர்த்த ஞாயிறு அன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் போல மற்றுமொரு தாக்குதல் 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, 2019 ஆம் ஆண்டு தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
”2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக பின்னிருந்து செயற்பட்டவர்கள் யாரும் இன்னும் வெளியே இருந்தால் அவர்களை இயலுமானவரை விரைவாக கைது செய்ய வேண்டும். அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டால், 2024 நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை குறிவைத்து மீண்டும் ஒரு தாக்குதலை நடாத்துவார்கள்.
2019 தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் ஒரு தீவிரவாதி என்பது உண்மை தான். ஒரு குறித்த குழு, சஹ்ரான் மற்றும் அவரது குழுவை, 2019 தேர்தலுக்கு முன் தாக்குதல் நடாத்த விரைவுபடுத்தியது” என நிரோஷன் தெரிவித்தார்.
நியூஸிலாந்து மசூதியின் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை போன்ற பகுதிகளில் இஸ்லாமிற்கு எதிராக 2019 ஏப்ரலுக்கு முன் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காகவே, சஹ்ரான் மற்றும் குழுவினரால் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் நடாத்தப்பட்டதென, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன்பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.