Our Feeds


Tuesday, September 5, 2023

News Editor

166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2022 (2023) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (4) வெளியிடப்பட்டன.


www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.


இந்த வருடம் 263,933 விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், 84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 166,938 பேரில் 149,487 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள், மீதமுள்ள 17,451 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள்.


இந்த வருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய 96,995 விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நேற்று வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 (2023) பெறுபேறுகளின்படி, நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு-


உயிரியல் பாடத்தில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி முனசிங்க முதலிடத்தை பெற்றார்.


பௌதீக விஞ்ஞான பாடப்பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா முதலிடத்தையும் பெற்றுள்ளார்.


வர்த்தக பிரிவில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த காவிதினி தில்சராணி தருஷிகா முதலிடம் பெற்றார்.


பொறியியல் தொழில்நுட்பத்தில் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்ரியா முதலிடம் பெற்றார்.


தகவல் தொழில்நுட்ப பிரிவில் தேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ருவினி அஹின்சா விக்ரமரத்ன முதலிடம் பெற்றார்.


முடிவுகள் வெளியான 24 மணி நேரத்திற்குள், அனைத்து பபாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு முடிவு தாளை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.


இந்த இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் அனைத்து பாடசாலை அதிபர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பாடசாலை பரீட்சை முடிவு ஆவணங்களை பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட நகலைப் பெறலாம்.


உயர்தரப் பரீட்சை 2022 (2023)க்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் மாத்திரம் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்ற விரும்பினால், அவர்கள் செப்டம்பர் 11 தொடக்கம் 16 வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். .


முடிவுகளின் மீள் திருத்தத்திற்காக https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் செப்டம்பர் 7 தொடக்கம் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.


இதேவேளை, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி உயிரியல் பிரிவில் மாவட்டத்தின் முதல் ஐந்து இடங்களையும், கணித பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளது.


உயிரியல் பிரிவில் ஆனந்த ஜோதி வித்யாசாகர், கண்ணன் பவித்ரன், நாகசேனன் சாரங்கன், தர்மலிங்கம் அமலன், ரகு காந்தன் தனுசன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளனர்.


கணித பிரிவில் ஸ்ரீ பந்தாகரன் சினேகன், லெஸ்லி பாஸ்கரதேவன் அபிசேக், சந்திரசேகரம் அபிசேகன், பகீரதன் தீபக், மொஹமட் நிஸ்வர் மொஹமட் இசாத், விமலசேகரன் கிசாலன் ஆகியோர் முதல் 6 இடங்களை பெற்றுள்ளனர்.


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 33 மாணவர்கள் 3ஏ பெறுபேறு பெற்றுள்ளனர்.


பொறியியல் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் அன்பழகன் திவன்பிரபாகர் பெற்றார்.

ஹாட்லிக்கல்லூரியில் 16 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றள்ளனர்.


உயிரியல் தொழில்நுட்பத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி சசிகா பாஸ்கரன் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.


மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் அடம்பன் மத்திய மகா வித்தியாலத்தை சேர்ந்த தியாகன் தேவகரன் முதலிடம் பெற்றார்.


வவுனியா மாவட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் முதலிடம் பெற்றார்.


கணிதப்பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த நிசாந்தன் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். அதே பாடசாலையின் விதுவர்சன் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்றார்.


கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் சண்முகம் மாதுளன் முதலிடம் பெற்றார்.


உயிரியல் பிரிவில் பளை மத்திய கல்லூரியை சேர்ந்த கேதீஸ்வரன் கிசேரன் முதலிடம் பெற்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »