இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளின் இரத்துச் செய்யப்பட்ட வாகன இலக்கங்களில் வேறு சொகுசு வாகனங்களைப் பதிவுசெய்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் சிலர் நீண்டகாலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது குறித்து கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் அரசுக்கு சுமார் 15 கோடி ரூபா வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அரச அனுசரணையின் கீழ் வரி விலக்குடன் இறக்குமதி செய்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்த மோட்டார் வாகனங்களின் பதிவுகளில், வேறு சில சொகுசு வாகனங்களின் அடிச்சட்ட இலக்கம் மற்றும் இயந்திர இலக்கங்களை உள்ளீடு செய்து, வேறு நபர்களின் பெயரில் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்மூலம் கடந்த வருடங்களில் பதிவுசெய்யப்பட்ட தூதரக அதிகாரிகளின் 6 வாகனங்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு பதிவுகளை இரத்து செய்துவிட்டு மற்ற சொகுசு வாகனங்களின் அடிச்சட்ட இலக்கங்கள், இயந்திர இலக்கங்களை உள்ளீடு செய்து பதிவுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளமை கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.