Our Feeds


Thursday, September 14, 2023

ShortNews Admin

12 வயது பாத்திமா ஹீமாவை விஷ ஊசி போட்டு கொலை செய்த பாட்டியின் அதிர்ச்சி வாக்குமூலம்



பு.கஜிந்தன்

பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என, 12 வயது சிறுமியின் பாட்டி,பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும் 55 வயதான பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும்  செவ்வாய்க்கிழமை (12) மீட்கப்பட்டனர். 

சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர், 

 பொலிஸ் விசாரணையின் போது,

தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் கூறியுள்ளார். அத்துடன் தனது பேத்தியின் பெயர் பார்த்திமா ஹீமா (வயது 12) என தெரிவித்துள்ளார். 

" நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லிம் இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாள்.  அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் பார்த்திமா ஹீமா (வயது 12)   அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன் போது அவர்களது பிள்ளை என்னுடன் வளர்ந்து வந்தேன்.

சில காலத்தில் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்து   வாழ சென்று விட்டனர். பேத்தி என்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில் , பேத்தியின் தகப்பன், தனது பிள்ளையை தன்னுடன் , அனுப்புங்கள் , நான் வளர்க்கிறேன் என கூறி எனது பேத்தியை அழைத்து சென்று விட்டார். 

பேத்தி என்னை விட்டு பிரிந்ததும், அவளின் பிரிவு துயரம், அவளின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது. அதனால் நான் சில மாதங்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன், 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருகோணமலைக்கு சென்று , எனது பேத்தியின் தந்தையிடம் , சில நாட்கள் பேத்தி என்னுடன் இருக்கட்டும், வீட்டுக்கு கூட்டி போய் சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன் என கூறி பேத்தியை அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாணம் வந்தேன். 

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி அந்த மருத்துவ மனைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்கு பெற்று, தங்கி இருந்தோம். 

அப்போது, பேத்தியின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையில் பேத்தியை கொலை செய்து விட்டு , நானும் உயிரை மாய்த்துக்கொள்வோம் என முடிவெடுத்தேன். 

அறையில் பேத்தியை விட்டு விட்டு , அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று தூக்க மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளையும் ஊசியையும் (சிறிஞ்) வாங்கினேன். என்னிடம் மருத்துவ தாதி என்பதற்கான அடையாள அட்டை இருந்தமையால் , அதனை காட்டி மருந்துகளை வாங்கினேன். 

அறைக்கு வந்து பேத்திக்கு தூக்க மாத்திரைகளை போட கொடுத்து , அவள் தூங்கிய பின்னர் மருந்துகளை கலந்து ஊசி மூலம் அவளின் உடலில் செலுத்தினேன். 

பின்னர் நானும் அதனை எனக்கு செலுத்திக்கொண்டேன். ஊசி ஏற்றியதில் அவள் இறந்து விட்டாள் , நான் காப்பாற்றப்பட்டு விட்டேன்" என தெரிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த சிறுமியின் பாட்டியை   யாழ்.நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (14) பொலிஸார்  முற்படுத்திய போது , அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளை , " எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம்" என சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு எழுதிய கடிதமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »