இலங்கை கடற்படையால் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு நீதி கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மனுவை கையளித்துள்ளனர்.
2008 முதல் 2009 வரை கப்பம் பெறுவதற்காக கொழும்பில் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட இளைஞர்கள் விவகாரத்திற்கு அதிகாரிகள் நீதி வழங்க தவறியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டி காணாமல்போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்திடமும் பல இராஜதந்திர அலுவலகத்திடம் மனுக்களை கையளித்தனர்.
இந்த விடயம் குறித்து சர்வதேச சமூகம் அக்கறையுடன் உன்னிபாக உள்ளதை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தவேண்டும் என ஐநாவிற்கும் தூதரகங்களிற்கும் வழங்கியுள்ள கடிதத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதன் மூலமும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலம் வேறு வழிகள் மூலம் சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தவேண்டும் எனவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காணாமல்போனவர்களின் உறவினர்கள் நீதிமன்ற அமர்விற்கு செல்வதற்கும் சட்டத்தரணிகளிற்கு செலுத்துவதற்கான கட்டணங்களிற்காகவும் ஐநா உதவவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.