கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் மனித பாவனைக்கு உதவாத 102 கொள்கலன் மீன்களை இலங்கை சுங்கத்துறை நாட்டினுள் அனுமதித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாவனைக்குதவாத மீன்களை மீள் ஏற்றுமதி செய்யுமாறு இலங்கை சுங்கத்துறை கப்பல் முகவருக்கு அறிவிக்காமல் அதனை மீறி நாட்டினுள் அனுமதித்துள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷீ ஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி மீன்களுடன் பயணித்த சிஎம்ஏ கைலாஸ் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மின்சாரமின்றி சுமார் 20 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்த பின்னர், துறைமுக அதிகாரிகள் வழங்கிய ஜெனரேட்டர்கள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி திருத்தப் பணிகளுக்காக கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த வகை மீன்கள் கெட்டுப்போனதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இது முழு சூரை மீன் என சுங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு 62 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வரிகள் அறவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்படாவிடின் இலங்கைத் துறைமுகத்தில் பொருட்களை இறக்க முடியாது என கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் 2022 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.