Our Feeds


Wednesday, August 9, 2023

ShortNews Admin

VIDEO: முஸ்லிம்களுடன் தனியாக பேச்சு நடத்த நான் தயார் - ஹக்கீமின் கோரிக்கைக்கு ஜனாதிபதி உடனடி பதில்!



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரையைத் தொடர்ந்து அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது ரவூப் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகாரப் பகிர்வு நல்லிணக்கம் உட்பட முக்கிய பல சிறந்த விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார். அது தொடர்பில் பிரிதொரு தினத்தில் விவாதம் நடத்த முடியும்.

சர்வ கட்சி மாநாடு தொடர்பில் தெரிவிக்கையில், சில கட்சிகள் அது தொடர்பான தப்பபிப்பிராயங்களை முன் வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்கள் அங்கு முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.

அதனை கருத்திற்கொண்டு வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில்  முஸ்லிம் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதே வேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

நாம் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் முன் வைக்கும் கோரிக்கை என்னவெனில், உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் வரை அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட அலுவலகங்களில் முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறான பேச்சு வார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கு நான் தயார். 

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு அந்த பேச்சு வார்த்தையை நடத்த முடியும். 

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை நியமித்துள்ளோம். வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டும் என்றால் நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »