பாராளுமன்றத்தில் ஆண் விபசாரி என்ற வார்த்தை பிரயோகத்தால். சபைக்குள் இன்று (08) சற்று சலசலப்பு ஏற்பட்டது. அந்த ஆண் விபசாரி யார்? என்று பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர். இன்னும் சிலர் உறுப்பினர் அந்த சொல்லை பிரயோகித்தமைக்காக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
முன்னதாக எழுந்து ஒழுங்கு பிரச்சினையை கிளப்பிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் உள்ள ஆண் விபசாரி ஒருவர் கட்சி தலைவராகும் நோக்கில் செயற்படுகிறார் என குறிப்பிட்டார்.
இதனிடையே எழுந்த இன்னும் சிலர் அந்த ஆண் விபசாரி எம்.பி. யார் என கேள்வி எழுப்பினர்,
இராஜாங்க அமைச்சரின் இந்த வார்த்தைப் பிரயோகத்துக்கும் தமது கடும் எதிர்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்டதுடன் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரையும் குற்றம் சாட்டினர்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க.
கடந்த காலங்களில் எனக்கு எதிரான கருத்துக்களை தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்டது. பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அந்த ஊடகம் அழைக்கப்பட்ட போது தவறை ஏற்றுக்கொண்டது. அந்த தனியார் ஊடகத்தை போன்று பாராளுமன்றத்தில் ஆண் விபச்சாரி ஒருவர் செயற்படுகிறார்.
கட்சி தலைவராகும் நோக்கத்தில் இருந்துக் கொண்டு செயற்படும் அவர் பாராளுமன்றத்தில் ஆண் விபசாரி போல் செயற்படுகிறார்.ஆகவே அந்த ஆண் விபசாரி எம்மை குழப்பிக் கொள்ளக் கூடாது என்றார்.
இராஜாங்க அமைச்சரின் இந்தக்கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் இராஜாங்க அமைச்சருக்கு உரிய பாராளுமன்ற உறுப்பினருடன் தனிப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். அதை அவர் முறையாக அணுக வேண்டும். அதை விடுத்து பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது.
பாராளுமன்ற கலரியில் பாடசாலை மாணவர்கள் அமர்ந்துள்ளார்.இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது. சபைக்கு தலைமை தாங்கும் பிரதி சபாநாயகர் இவ்வாறான முறையற்ற வார்த்தை பிரயோகங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றார்.
இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ சகல எம்.பி.க்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அந்த இராஜாங்க அமைச்சர் என்ன உரையாற்றுவார் என்பது எனக்கு முதலிலேயே தெரியாது.ஆகவே சபைக்கு தலைமை தாங்குபவர் மீது மாத்திரம் பொறுப்பை சுமத்த வேண்டாம் என்றார்.
இதன்போது எழுந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் ஆண் விபசாரி உறுப்பினர் என்று குறிப்பிட்டார். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் யார் அந்த ஆண் விபசாரி உறுப்பினர் என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.
எனவே இந்த சபையில் ஆண் விபசாரி உறுப்பினர் இருந்தால் அவர் யார் என்பதனை அவர் வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். அதே வேளை பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன . ஆகவே குறைந்தபட்சம் விபசாரி என்ற வார்த்தையையேனும் ஹன்சாட்டிலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த ஜே .வி.பி. தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க வாய்மூல விடைக்கான வினாவுக்கு அமைச்சர் பதிலளித்துக் கொண்டிக்கிறார். இடையில் பொருத்தமற்ற வகையில் இராஜாங்க அமைச்சர் எழுந்து முறையற்ற வகையில் பேசுகிறார். சபைக்கு தலைமை தாங்கும் பிரதி சபாநாயகரான நீங்கள் அதை ரசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதனை நாங்கள் பார்த்தோம் பிரதி சபாநாயகராக நீங்கள் சபையை முறையாக வழிநடத்த வேண்டும். அதற்கான பொறுப்பு உங்களுக்குண்டு என்றார்.
இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸஇ ஒழுங்கு பிரச்சினை என்று குறிப்பிட்டு அவர் எழுந்து உரையாற்றினார். விடயதானத்துக்கு அமைய ஒரு சிலர் உரையாற்றுவதில்லை. இவ்விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார்.