எமக்கான அதிகாரங்கள் எமது கைகளில் தரப்பட்டால்
மாத்திரமே எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவையில் ஒரு தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்தக் காரணத்தினாலேயே, தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலை கோருகிறார்கள். உண்மையில் மீன்பிடித்துறை அமைச்சரிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாக பல பிரச்சினைகளை முன்வைத்திருந்தாலும் இதுவரை வெற்றிற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பில் அதிகூடிய மீன்பிடித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேலண்டும். உரிய துறைக்கு ஒரு தமிழரே அமைச்சராக இருக்கின்றார்.
எனவே ஒரு அமைச்சரவை அந்தஸ்த்து இருந்தும் கூட இதுவரை தீர்வுகள் பெறப்படவில்லை என்பதால்தான் நாங்கள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் எமக்கான அதிகாரங்களைக் கோருகின்றோம். எமது கரங்களில் அதிகாரங்கள் தரப்பட்டால் நாமே எமது பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.