(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மின்கட்டணம் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை அறிவிக்கவில்லை.
நிலுவை கட்டணம் ஏதும் இருக்குமாயின் அதை மின்சார சபை அறிவித்தால் கட்டணம் செலுத்தலாம். இந்த விவகாரத்தை ஒருதரப்பினர் தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
போராட்டத்துக்கு பின்னர் கட்சியை பலப்படுத்தியுள்ளோம். ராஜபக்ஷர்களின் அரசியல் பயணம் முடிவடைந்து விட்டது என்று ஒரு தரப்பினர் எதிர்பார்த்தார்கள்.
பாரிய போராட்டத்துக்கு பின்னர் பலமடைந்துள்ளோம். ராஜபக்ஷர்கள் மீது நாட்டு மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
திருமண விழாவுக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செலுத்தவில்லை என்ற புதிய அரசியல் பிரசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது முன்னெடுத்துள்ளார்கள். இவ்விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வினவினேன்.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 'திருமண விழாவுக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கு இதுவரை கட்டணம் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபை இதுவரை அறிவிக்கவில்லை. மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார்' என குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்ற விவகாரம் தற்போது அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ஆனால் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.