சந்திரயான் விண்கலம் கடந்த 14 ஆம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 179 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம், 16 நிமிடத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் மறுநாளான 15 ஆம் தேதி சந்திரயான் விண்கலம், முதல் சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. சந்திரயான் திட்டத்தில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக Orbit Raising Manueuver எனப்படும் 'பாதை உயர உயர்த்தல்' என்னும் வினை மேற்கொள்ளப்பட்டது. மேலும் புவியின் சுற்றுவட்ட பாதையில் மிக அருகில் வரும்போது விண்கலத்தை உந்துவிசை மேற்கொள்ள செய்து அதன் மூலம் புவியின் நீள் வெட்டப் பாதையில் அதிக தூரம் செல்லுமாறு உயர்த்தப்பட்டது.
சந்திரயான் விண்கலத்தின் ரோவர் மற்றும் லேண்டருடன் விண்கலத்தை இயக்கும் உந்துவிசை அமைப்பும் இருக்கிறது. அதன் செயல்பாடுகள் மூலம் தான் கடந்த 16 நாட்களாக சந்திரயான் விண்கலம் திட்டமிட்ட பாதையில் பயணித்து வருகிறது.
அதன் படி
ஜூலை 14 - 179 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது.
ஜூலை 15 - முதல் சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.
ஜூலை 17 - இரண்டாவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.
ஜூலை 18 - மூன்றாவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.
ஜூலை 20 - நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.
ஜூலை 25 - ஐந்தாவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இவ்வளவு நாட்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் தற்போது நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியிலிருந்து 1 மணி வரை நிலவை நோக்கிய பயணத்திற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் விண்கலத்தில் உள்ள த்ரஸ்டர்களில் உந்து விசை ஏற்படுத்தப்பட்டு, அது நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 ன் வேகம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்த அதிகபட்ச அளவான 10.5 கி.மீ வினாடி என இருந்ததை விட வினாடிக்கு 0.5 கிமீ அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே 3.84 லட்சம் கிலோமீட்டர் இருக்கும் நிலையில், பூமி மற்றும் நிலவின் நிலையை பொறுத்து 3.6 முதல் 4 லட்சம் கிலோமீட்டர் பயணம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 5 தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் அடையும் என கூறப்படுகிறது.