(இராஜதுரை ஹஷான்)
ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறார்கள். கிராம அபிவிருத்தி சபையின் தலைவர் பதவிக்கு கூட தகுதியற்ற நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிப்பது நகைப்புக்குரியது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் லலித் எல்லாவெல தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு கட்சியின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயற்பட்டதால் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.
ஊழல் நிறைந்த அரசியல் கட்டமைப்புக்கு எதிராகவே மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.மக்கள் போராட்டம் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்பபடுத்தியது.
நாட்டு மக்கள் அரசியல்வாதிகளுக்கு மறக்க முடியாத பாடம் கற்பித்தும் பொதுஜன பெரமுன இன்றும் அதை ஒரு படிப்பினையாக கொள்ளவில்லை.
ஊழல்வாதிகள்,பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறார்கள்.
கிராம சேவை அபிவிருத்தி சபையின் தலைவர் பதவிக்கு கூட தகுதி இல்லாத நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிப்பது வேடிக்கையாகவுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.பலவீனமடைந்துள்ள அரசியல் கட்சிகள் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி காலவகாசம் வழங்கியுள்ளார்.
அதை பொதுஜன பெரமுன பயன்படுத்திக் கொள்கிறது.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்.