Our Feeds


Wednesday, August 2, 2023

Anonymous

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பது தவறு என்கிறார் - SLPP, MP காமினி லொக்குகே!

 



(இராஜதுரை ஹஷான்)


தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார்.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது.ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார். அந்த உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக்  கொள்ளவில்லை.

அரசியலமைப்பின்  13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை காட்டிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். 69 இலட்ச மக்களின் கோரிக்கை புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது.ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்றதாக்கப்படும்.

தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதும் தவறாகும்,நான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »