சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு மாளிகாவத்தை யூத் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது. ஜாவாலேன் மற்றும் மாளிகாவத்தை யூத் இடையில் நேற்று முன்தினம் (30) சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்ற தீர்க்கமான இறுதிச் சுற்றுப் போட்டியில் 1–0 என்ற கோல் வித்தியாசத்தில் மாளிகாவத்தை யூத் அணி அதிரடி வெற்றியை பெற்றது. அதன்படி கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் மாளிகாவத்தை யூத் இடையிலான, இறுதிப் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி பிற்பகல் 3.30க்கு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மாளிகாவத்தை யூத் அணி இவ்வாறான தொடர் ஒன்றில் இறுதிப் போட்டிக்கு கடைசியாக தகுதி பெற்றது 27 ஆண்டுகளுக்கு பின்னர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய குமாரணதுங்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மாளிகாவத்தை யூத் கழகம் தகுதி பெற்றிருந்தது.
16 அணிகள் பங்கேற்ற விஜய குமாரணதுங்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மாளிகாவத்தை யூத்–சோன்டர்ஸ் அணிகள் சுகததாச விளையாட்டு அரங்கில் மோதியதோடு அதில் 1–0 என சோன்டர்ஸ் அணி வெற்றியீட்டியது.
தொடர்ந்து மாளிகாவத்தை யூத் விளையாட்டுக் கழகம் பல்வேறு காரணங்களால் பின்னடைவை சந்தித்ததோடு, தற்போது இராணுவப் படை அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் இசதீனின் பயிற்சியின் கீழ் அந்த அணி சோபிக்க ஆரம்பித்துள்ளது.
ஜாவாலேன் மற்றும் மாளிகாவத்தை யூத் இடையிலான போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாததோடு, 74 ஆவது நிமிடத்தில் மொஹமட் சப்ரான் வெற்றி கோலை பெற்றார். ஜாவாலேன் அணியின் பின்கள வீரர்கள் மூவரில் பந்தை முன்னோக்கி எடுத்துவந்த சர்பான் அந்த வெற்றி கோலை புகுத்தினார். இலங்கை கால்பந்து விளையாட்டுக்கு சர்வதேச தடை இருக்கும் வேளையில் ஜாவாலேன் மற்றும் மாளிகாவத்தை யூத் இடையிலான போட்டியை பார்ப்பதற்கு 2300 அளவான ரசிகர்கள் வருகை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
6ஆவது முறையாகவும் நடைபெறும் சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 150,000 ரூபாவும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 100,000 ரூபாவும் பரிசாக வழங்கப்படுவதோடு ஒவ்வொரு போட்டியிலும் திறமையை காட்டுகின்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிட்டி லீக் கால்பந்து லீக்கின் தலைவர் ஆர். புவனேந்திரனின் தனிப்பட்ட நிதியில் அனுசரணை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.