(க.கிஷாந்தன்)
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், காணி உள்ளிட்ட இதர உரிமைகளை வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் நடைபேரணி இன்று (12.08.2023) முன்னெடுக்கப்பட்டது.
'மலையகம் - 200, நாம் இலங்கையர்கள்' எனும் மகுடவாசகத்துடன் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஹட்டனில் இருந்தும், நுவரெலியாவில் இருந்தும் ஆரம்பமான பேரணிகள் தலவாக்கலை நகரில் சங்கமித்தன. அங்கு கூட்டமொன்றும் நடத்தப்பட்டது. அரசியல் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றன.
ஹட்டன் மணிகூட்டு கோபுர சந்தியில் ஆரம்பமான பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகிய எம்.பிக்களும், நுவரெலியாவில் இருந்து ஆரம்பமான பேரணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகிய எம்.பிக்களும் பங்கேற்றனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளினதும் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், மக்கள் என பலரும் இப்பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை தெரிவிப்பதற்காக அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்றிருந்தார்.
குறித்த பேரணியின்போது மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன. கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.