(எம்.ஆர்.எம்.வசீம்)
நீர் கட்டண அதிகரிப்புக்கு எதிராக விரைவாக மக்களை அணிதிரட்டி நாடுபூராகவும் போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் நீர் கட்டணத்தை அதிகளவில் அதிகரிக்க எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் வாழ்வதற்கு கஷ்டப்பட்டும் வரும் நிலையில் அரசாங்கம் நீர் கட்டணத்தை 50 வீதத்தால் அதிகரித்திருப்பது, பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது சுமத்தப்படும் பாரிய சுமையாகும்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விரைவில் மக்களை அணி திரட்டிக்கொண்டு நாடுபூராகவும் போராட்டங்களை மேற்கொள்ளவும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் இருக்கிறோம்.
அரசாங்கத்தின் இயலாமை காரணமாக தற்போது வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மருந்து பிரச்சினை மற்றும் மக்கள் மீது சுமத்தியுள்ள பொருளாதார அழுத்தமும் அவர்கள் நோயாளர்களாக ஆகுவதற்கு பாரியளவில் தாக்கம் செலுத்துகிறது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரியளவிலான வரி அதிகரிப்பு காரணமாக பொருட்கள் மற்றும் சேவை கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
அதேபோன்று பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை காரணமாகக்கொண்டு இலட்சக்கணக்கானவர்கள் தொழிலற்று இருக்கின்றனர்.
எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பாெருட்களை கொள்வனவு செய்யும் போது மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகின்ற நிலையில், மக்களின் அத்தியாவசிய நுகர்வுப்பொருளான நீருக்காக அறவிடப்படும் கட்டணம் பாரியளவில் அதிகரித்துள்ளதன் மூலம் மக்களை மேலும் கஷ்டத்துக்கு தள்ளி விட்டிருக்கிறது.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை பூரணப்படுத்திக்கொள்வதற்காக மக்களுக்கு பாரியளவில் அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் மீது சுமத்தி இருக்கும் அனைத்துவகைய அழுத்தங்களுக்கு எதிராக மக்களை வாழவைக்கும் உரிமையை கோரி பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொ்ளள நாங்கள் தயார்.
அரசாங்கத்தின் இந்த செயலை கண்டித்தும் அதிகரிக்கப்பட்ட நீர கட்டணத்தை மீள பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் விசேடமாக இது தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்ட ஒன்றை ஆரம்பித்து, மக்களை அணிதிரட்டுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.